முள்ளியவளையில் ஆணின் உடல் எச்சங்கள்; மனைவி உள்ளிட்ட மூவர் கைது

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மனித உடல் எச்சங்கள் கடந்த டிசம்பர் 30ஆம் திகதியன்று மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

நீண்ட காலத்தின் பின்னர் கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை நேற்று (21) முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று நபர்களையே பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)


Add new comment

Or log in with...