இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானியா பாராட்டு

ஜனாதிபதியை சந்தித்த UK தெற்காசிய அமைச்சர் கருத்து

UKயிலுள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுப்பு

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளதாக, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு (Lord Tariq Ahmad) தெரிவித்தார்.

அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையிலுள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விருப்புவதாகவும், அதற்காக புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறும் தாரிக் அஹமட் பிரபுவிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, நேற்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாற்றும் போதே, அமைச்சர் தாரிக் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

தெற்காசியா, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய அமைப்புக்கான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியம், மத்திய ஆசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கிடையிலான ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு துறைகள் சார்ந்த பொறுப்புகள், தாரிக் அஹமட் பிரபுவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்திவலுத் துறையின் இலக்குகளை அடைவதற்கும் தொழில்நுட்பம்சார் தடைகளை வெற்றிகொள்வதற்கும் உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அஹமட் பிரபு, தனது நாட்டுக்குச் சென்றவுடன் இந்த விடயம் பற்றி கூடிய விரைவில் ஆராய்ந்து, அது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கான முதலீட்டு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியுமெனச் சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய இராச்சியத்தில் வாழும் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதார ஊழியர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறைக்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகவும், அவர் உறுதியளித்தார்.

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் தாரிக் அஹமட் பிரபுவிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் நெருங்கிய மற்றும் நடைமுறை நண்பராக ஒத்துழைக்க, ஐக்கிய இராச்சியம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton), முதன்மைச் செயலாளர் மேத்யூ டெய்த் (Mathew Deith), தாரிக் அஹமட் பிரபுவின் உதவியாளர் இசபெல் ஸ்கொட் (Isabelle Scott), வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 


Add new comment

Or log in with...