வளர்ந்தவர்கள், சிறுவர்களுக்கான உலகலாவிய தடுப்பூசியாக 'COVAXIN'

- இந்தியாவின் பாரத் பயோடெக் அறிவிப்பு

கொவிட்-19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கி, உற்பத்தி செய்துள்ள கோவெக்சின் தடுப்பூசியை, வளர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான உலகலாவிய தடுப்பூசியாக இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்டுள்ள இத்தடுப்பூசி உற்பத்தி நிறுவனம், 'கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வளர்ந்தவர்கள்  மற்றும் சிறுவர்களுக்காக உலகலாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஒன்றாக, இப்போது எமது கொவெக்சினும் விளங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், 'கொவிட் - 19 தொற்றுக்கு எதிரான உலகளாவிய தடுப்பூசியை உள்நாட்டிலேயே உருவாக்கும் எமது இலக்கை நாம் அடைந்துள்ளோம்.  அதன் உரிமத்திற்கான அனைத்து தயாரிப்பு மேம்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. கொவிட் 19 தொற்றின் டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகளின் தாக்கங்களை எமது கோவெக்சின் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என்று நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

அண்மையில் எமோரி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளின் படி, இத்தடுப்பூசியின் (பி.பி.வி.ஐ.152) முதலிரு டோஸுகளையும் பெற்று ஆறு மாதங்கள் கடந்த பின்னர் இதன் பூஸ்டர் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொவிட் 19 தொற்றின் டெல்டா, ஒமிக்ரோன் தாக்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவெக்சின் தடுப்பூசி கொவிட் 19 தொற்றின் அல்பா, பீட்டா, செடா, கப்பா, டெல்டா மற்றும் ஒமிக்ரோன் ஆகிய பிறழ்வுகளின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவது ஏற்கனவே நடாத்தப்பட்ட ஆய்வுகளிலும்  தெரிய வந்துள்ளன என்று ஏ.என்.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...