உடல் உபாதைகளை தீர்ப்பதில் 'மூலிகைகளின் அரசி' துளசி

நவீன வாழ்க்கை முறை காரணமான நாட்பட்ட நோய்களால் உலகளாவிய ரீதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பலவித ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மூலிகைகளின் நுகர்வு என்பவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நோய்கள் மற்றும் இறப்பு வீதத்தைக் குறைக்கலாம்.

அனைத்து மூலிகைகளிலும் துளசி முதன்மையானது. அத்துடன் தற்போது அறிவியல் ஆராய்ச்சி அதன் மருத்துவ நன்மைகளை உறுதிப்படுத்துகின்றது. துளசியின் இலை, தண்டு, பூ, வேர் என அனைத்து பகுதிகளும் மருத்துவகுணம் வாய்ந்தவை. துளசி என்பது Lamiaceae (tribe Ocimeae) குடும்பத்தில் உள்ள மூலிகைச் செடி ஆகும். இது வடமத்திய இந்தியாவில் தோன்றியதாக கருதப்படுகின்றது. தற்போது கிழக்கு உலக வெப்ப மண்டலங்கள் முழுவதும் வளர்கின்றது. இவற்றில் 9 இனங்கள் காணப்படுகின்றன.

மூலிகை மருத்துவத்தில் துளசியானது 'ஒப்பற்ற ஒன்றாக, இயற்கை மருத்துவப் பொருளாக, மூலிகைகளின் அரசியாக, வாழ்க்கையின் அமுதமாக கருதப்படுகின்றது. துளசி குணமாக்கும் நோய்கள் ஏராளமாகும். அதனால்தான் இது 'மூலிகைகளின் அரசி' என அழைக்கப்படுகின்றது.

வீடுகளில் துளசிச் செடியை கடவுளாக வணங்குகின்றார்கள். துளசிச் செடியற்ற நந்தவனத்தை காண முடியாது. பொதுவாக துளசி படர்ந்துள்ள இடத்தை 'பிருந்தாவனம்' என்று சொல்வார்கள்.

மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள 'அடாப்டேஜென்' மனஅழுத்தத்தைக் குறைக்கும். துளசியின் மருத்துவ குணங்கள் பற்றி நூற்றுக்கணக்கான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் அறிக்கைகளின்படி துளசிக்கு தனித்துவமான பல மருத்துவ பண்புகள் உள்ளன என்பது அறியப்பட்டுள்ளது.

துளசியில் உயிர்ச்சத்து சி மற்றும் நாகச்சத்து அதிகளவில் காணப்படுவதன் காரணமாக இது வைரஸ், பக்ரீரியா மற்றும் பங்கசு போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதுடன் உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. மேலும் சுரம் ஏற்படும் நிலைகளில் உடல் வெப்பநிலையை குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றது. துளசி இலைகளை ஏலத்துடன் சேர்த்து ஒரு கோப்பை நீரில் வேகவைத்து அதனுடன் பால், சீனி சேர்த்து அருந்த சுரம் தணியும். துளசியிலைச் சாற்றுடன் மிளகு பொடி சேர்த்தும் அருந்தலாம். அல்லது 10 துளசியிலைகளுடன் 5 மிளகு தட்டிச் சேர்த்து அதனுடன் 2 கோப்பை நீர் சேர்த்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி அருந்துவதாலும் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.

துளசியிலைச் சாற்றுடன் தேன், இஞ்சிச் சாறு சேர்த்து அருந்துவதால் இருமல், சளி, இழுப்பு, தடிமன் போன்ற நிலைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். துளசிச் சாற்றுடன் எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடாக்கி சிறிதளவு தேன் சேர்த்து உணவின் பின் உள்ளெடுத்து வர உடல் எடை படிப்படியாகக் குறையும். தினமும் 10 துளசியிலைகளை வாயிலிட்டு மென்று வர வாயில் உண்டாகும் துர்நாற்றம் தீரும். சாற்றை உள்ளுக்குள் விழுங்கி வர வாய் மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்கள் தீரும். அத்துடன் இரத்தம் சுத்தியாகும். அதேபோல ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் விட்டு அதனுடன் கைப்பிடியளவு துளசியிலைகளை சேர்த்து 8 மணித்தியாலம் மூடிவைத்து வெறும் வயிற்றில் அந்நீரை அருந்தி வர வேண்டும். இதனால் சமிபாடு மேம்படுவதுடன், உடலின் அமிலத்தன்மை சீராக பேணப்படும். தினமும் துளசியிலைகளை உட்கொள்வதாலும், துளசி ஊறிய நீரைப் பருகிவருவதாலும் துளசியில் உள்ள antioxidant காரணமாக புற்றுநோய் அபாயம் குறைகின்றது.

சொறி, சிரங்கு போன்ற தோல்நோய் நிலைகளில் துளசியிலையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பற்றுப் போடலாம். ஆய்வுகளின் மூலம் துளசியிலைச் சாறு நீரிழிவு நோயாளிகளில் குருதியில் குளுக்கோசின் அளவை குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே தினமும் சிறிதளவு துளசியிலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். மேலும் குருதியில் கொழுப்பின் அளவை குறைப்பதன் மூலம் அதிஉயர் குருதியமுக்க நிலைகளிலும், இதயம் மற்றும் குருதிச் சுற்றோட்டத்தொகுதி சார்ந்த நோய்நிலைகளிலும் உரிய தீர்வை அளிக்கின்றது. எனவே நாம் தினமும் துளசியை நுகர்வதனால் எமது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு தீர்வு ஏற்படுகின்றது.

கலாநிதி திருமதி கௌரி ராஜ்குமார்...
(சிரேஷ்ட விரிவுரையாளர், தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்)

வைத்திய கலாநிதி செல்வி வினோதா சண்முகராஜா...
(சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...