உணவு நெருக்கடி தொடர்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை

அரசிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன

உணவு நெருக்கடி தொடர்பில் தேவையில்லாத அச்சமோ, சந்தேகமோ ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. உணவு நெருக்கடி நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத்  தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படலாம் என்று வெளியாகும் செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவு நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பசுமை விவசாயத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உற்பத்திகள் குறைவடைந்தால் தேவையான அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவுடனான அரிசி –- இறப்பர் உடன்படிக்கைக்கு 75 வருடங்கள் பூர்த்தியாவதால் 10 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா தீர்மானித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் இலங்கைக்கு கிடைக்கும்.அதேபோன்று வீட்டுத் தோட்டங்களில் பயிர் செய்யக்கூடிய வகையில் 5,000 ரூபா உதவியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் பயன்படுத்தக் கூடிய காணிகளில் தமக்கு தேவையான பயிர்ச்செய்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...