13ஆவது திருத்தத்தை பாதுகாக்கவே நாம் இந்தியாவை நாடினோம்

அதில் தவறில்லையென்கிறார் சித்தார்த்தன்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு இந்தியா என்பதாலேயே 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு எதிராக இந்தியாவை நாடியுள்ளோம். இது நாட்டுக்கு எதிரானதல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வுக்காக தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி தனது உரையில் எங்கும் குறிப்பிடவில்லை.  ஆனால் அவர் எமது ஒத்துழைப்பை கோருகிறார். பொருளாதார நெருக்கடிக்கு தமிழ் இனப்பிரச்சினையும் அதனால் வந்த அழிவுகளுமே பிரதான காரணியாகும். பண்டா செல்வா காலம் முதல் பல பேச்சுகள், பல போராட்டங்கள் நடந்துள்ளன. நியாயமான தீர்வு காண்பது முக்கியமானது.

2009 இல் யுத்தம் முடிவுக்கு வந்தது.ஆனால் சமாதானம் வரவில்லை. யுத்தம் நிறைவடைந்ததானது சமாதானம் நிலைநாட்டப்பட்டதாகாது. யுத்தத்தால் சேதமான எமது பகுதிகளை முன்னேற்ற நியாயமான தீர்வு முன்வைக்கப்படுவது பிரதானமானது. 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசு தயங்குவது இந்த நாட்டில் மாத்திரமே நடக்கிறது. மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும். இருக்கும் அதிகார பரவலாக்கல் கூட வழங்கப்படவில்லை.

13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கான நோக்கம் பலருக்குள்ளது. இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் ஒரு தரப்பான இந்தியாவிடம் உதவி கேட்க நேரிட்டுள்ளது. 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முழுமையான தீர்வல்ல. ஆனாலும் இன்றிருக்கும் நிலையில் 13 ஆவது திருத்தம் ஒழிக்கப்பட்டால் எதுவும் அற்ற நிலை ஏற்படும். இது நாட்டுக்கு எதிரான செயற்பாடல்ல. ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டதால் தான் இந்தியாவிடம் கோரியுள்ளோம்.


Add new comment

Or log in with...