சுனாமி தாக்கிய டொங்காவில் பேரழிவுகள் தொடர்பில் அச்சம்

நிவாரண உதவிகளுக்கும் சிக்கல்

எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி தாக்கிய டொங்கா நாட்டின் ஓடுபாதை எரிமலை சாம்பலால் மூடியிருக்கும் நிலையில் நிவாரண உதவிகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீர் மற்றும் ஏனைய உதவிப் பொருட்களை நியூசிலாந்து அனுப்ப முயன்றபோதும் பிரதான விமானநிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் உள்ளது.

டொங்காவின் சில தீவுகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக உதவி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்ட சூழலில் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய டோங்காவுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் அனுப்பி வைப்பதாக நியூஸிலந்து அதிகாரிகள் கூறினர்.

ஆனால் அந்தக் கப்பல்கள் சென்றுசேர 3 நாள்கள் பிடிக்கும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். நிவாரணப் பணிகளில் உதவக்கூடிய ஹெலிகொப்டர் ஒன்றும் கப்பலில் அனுப்பப்படும்.

கடலுக்கடியில் இருக்கும் எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்ததை அடுத்து அருகில் இருக்கும் டொங்கா நாட்டை சாம்பல் மூடியிருப்பதோடு சுனாமி அலையும் தாக்கியது.

தென் பசுபிக் பகுதியில் 170க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட டொங்கா நாடு ஜப்பான் அளவு பெரிதாகும். 100,000க்கும் அதிகமானவர்கள் வசிக்கும் அந்த நாட்டில் பெரும்பாலானவர்கள் பிரதான தீவான டொங்காடபுவிலேயே வாழ்கின்றனர்.

டொங்காடபுவின் மேற்குக் கடற்கரை பகுதியிலேயே பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா குறிப்பிடுகிறது. எனினும் டொங்காடபுவின் வடக்காக அமைந்திருக்கும் ஹபாய் தீவுக் கூட்டங்கள் பற்றி கவலை அதிகரித்துள்ளது. ஒரு தீவின் ஒட்டுமொத்த கிராமமும் அழிந்திருப்பது கண்காணிப்பு விமானங்களில் அவதானிக்கப்பட்டிருப்பதோடு மற்றொன்றில் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...