ஒமிக்ரோன்: உண்மை என்ன?

'ஒமிக்ரோனை, 'இயற்கை தடுப்பூசி' என்று அழைப்பது தவறு. ஒவ்வொரு தொற்றுக்கும் பக்க விளைவுகள் உண்டு. ஒமிக்ேரான் பாதிப்புடைய நோயாளர்கள் நீண்ட கால கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படலாம் - மருத்துவ நிபுணர்

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபால் வெளிப்படும் நோய் அறிகுறிகள் இலேசானதாகத் தோன்றுகிறது. அந்த பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் குறைவானதாகவே காணப்படுகின்றது. அதனால் ஒமிக்ரோன் வேகமாக பரவக்கூடிய தொற்றாக இருந்தாலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒமிக்ரோன் திரிபு ஒரு 'இயற்கையான தடுப்பு மருந்து' என சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், இதனை இந்திய மகாராஷ்டிரா கொரோனா தடுப்பு செயற்பாட்டமைப்பின் உறுப்பினரான மருத்துவரொருவர் மறுத்துள்ளார். 'இது ஒரு தவறான கருத்து. ஒமிக்ரோன் உயிராபத்து மிக்கது என்றுள்ளார் அவர்.

என்றாலும் ஒமிக்ரோனை 'இயற்கை தடுப்பு மருந்து' எனச் சிலர் கருதும் நிலைமை எவ்வாறு உருவானது என்பது கவனம் செலுத்துவது அவசியம்.

அதனால் இயற்கையான தடுப்பு மருந்து என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது மிகவும் பலவீனமான நுண்ணுயிரிகள் அல்லது வைரஸ்கள் எந்தவொரு நோய்க்கும் எதிராக எதிர்ப்பு மருந்தாக உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. சில தடுப்பு மருந்துகளில் இறந்த வைரஸும் பயன்படுத்தப்படுகிறது.

இது தொடர்பில் மகாராஷ்டிராவின் தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் பிரதீப் அவதே, 'ஒமிக்ரோன் கடுமையான நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனாலும், அதன் பரவும் திறன் மிகவும் தீவிரமானது. அதனால் அதிகமானோருக்கு இத்தொற்று ஏற்பட்டாலும் நோய் தீவிர நிலையில் இராது.

இருப்பினும் இத்தொற்று ஒவ்வொருவரது உடலை சென்றடைந்ததும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இதன் விளைவாகவே சில நிபுணர்கள் ஒமிக்ரோனை 'இயற்கையான மருந்து' என்கின்றனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு ஒமிக்ரோன் திரிபு முக்கிய காரணமாக விளங்குகின்றது. இது மரணம் விளைவிக்கும் டெல்டாவுக்கு மாற்றலாகி வருகிறது என்கிறார் அவர்.

இதேவேளை மும்பையிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றின் பொது மருத்துவரொருவர், 'ஒமிக்ரோன் உண்மையில் கடவுளால் அனுப்பப்பட்ட ஒரு 'இயற்கை தடுப்பு மருந்து'. அவ்வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நோயாளர்களுக்கு அறிகுறிகளும் மிகக் குறைவு' என்கிறார் அவர்.

தற்போதைய சூழ்நிலையில் ஒமிக்ரோன் அலையில் நோயாளர்களுக்கு ஒட்சிசன் சிகிச்சை தேவையில்லை என்றும், வென்டிலேட்டர் தேவையில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொதுமருத்துவர் கெளதம் பன்சாலி, 'டெல்டா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்த அலையில் பிரதிபலிக்கவில்லை. நோயாளர்களுக்கு இந்தியாவில் மருந்து தேவையில்லை. அதனால் இற்றைவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் ஒமிக்ரோனை இயற்கையான தடுப்பு மருந்து எனலாம் என்கிறார். இதேவேளை மருத்துவர் ஷஷாங்க் ஜோஷி, 'ஒமிக்ரோனை, 'இயற்கை தடுப்பூசி' என்று அழைப்பது தவறு. ஒவ்வொரு தொற்றுக்கும் பக்க விளைவுகள் உண்டு. ஒமிக்ேரான் பாதிப்புடைய நோயாளர்கள் நீண்ட கால கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படலாம். அதன் விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை. ஒமிக்ேரானை ஒரு 'இயற்கை தடுப்பூசி' என்று கூறுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை' என்கிறார்.

ஆகவே ஒமிக்ரோன் திரிபின் நோய்த் தாக்கம் குறைவாகக் காணப்பட்டாலும் அதன் தொற்றைத் தவிர்த்துக் கொள்வதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை உச்சளவில் பேணிக் கொள்ள வேண்டும். அத்தோடு கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவும் தவறக்கூடாது.


Add new comment

Or log in with...