ஹட்டன் - சிங்கமலை வனப் பிரதேச அணைக்கட்டு பகுதியில் ஆணின் சடலம்

ஹட்டன் - சிங்கமலை வனப் பிரதேச அணைக்கட்டு பகுதியில் ஆணின் சடலம்-Body Found-Hatton Singamalai

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன், சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (17) முற்பகல் 9.00 மணியளவில் அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் சிங்கமலை வனப் பிரதேச அணைக்கட்டு பகுதியில் ஆணின் சடலம்-Body Found-Hatton Singamalai

மீட்கப்பட்ட ஆண் நீரில் குளிக்கும் பொழுது தவறி விழுந்தாரா அல்லது எவராவது கொலை செய்து அணைக்கட்டில் வீசிச் சென்றார்களா என்பது தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30 இற்கும் 35இற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் சிங்கமலை வனப் பிரதேச அணைக்கட்டு பகுதியில் ஆணின் சடலம்-Body Found-Hatton Singamalai

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிங்கமலை அணைக்கட்டு சிங்கமலை வனப்பகுதியில் ஊற்றெடுக்கும் நீர் ஊற்றுக்களிலிருந்து வரும் நீரினை சேகரித்து அதனை இலங்கை நீர் வழங்கல் வடிகால் சபையினூடாக பெற்றுக்கொள்ளும் ஒரு அணைக்கட்டாகும்.

தற்போது குறித்த சடலம் அந்த அணைக்கட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதனால் அணைக்கட்டில் உள்ள நீர் தொடர்பாக சரியான அறிக்கை ஒன்றினை பெற்றுக்கொள்ளும் வரை தற்காலிகமாக நீர் பெற்றுக்கொள்வதனை நிறுத்தியுள்ளதாகவும், அது வரை இன்வரி  பிரதேசத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் நீரினை மக்கள் பயன்பாட்டுக்காக விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஹட்டன் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பாவனையாளர் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன், நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா, ஹட்டன் விசேட நிருபர் - மலைவாஞ்ஞன்)


Add new comment

Or log in with...