பொரளை தேவாலய சம்பவத்துடன் தொடர்புபட்ட சகலரும் கைதாவர்

விசாரணைகள் நிறைவடையும் முன்பு வீணான விமர்சனங்கள் வேண்டாம்

பொரளை தேவாலயத்தில் கைக் குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் கண்டிப்பாக நிறுத்தப்படுவரென பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்தார். விசாரணைகள் முடிவு பெறுவதற்கு முன்னர் அது தொடர்பில் வீணான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சமயத் தலங்கள் புனிதத் தலங்களில் இது போன்ற எந்த ஒரு சம்பவங்களும் இடம்பெற நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.  கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லது தேசிய பாதுகாப்பு வீழ்ந்துள்ளதென்று கூறுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் தேசிய பாதுகாப்பு என்பது முற்றிலும் விசாலமானது இதுபோன்ற சம்பவங்களை ஆங்காங்கே நடத்துவதற்கு சிலர் முயற்சிக்கலாம் அவ்வாறான ஒரு சிலர் முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக முறியடித்தே தீருவோம்.

நாட்டு மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் வீணான அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நான் வேண்டிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கண்டிக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :-

சம்பவம் ஒன்று இடம்பெற்று 24 மணி நேரத்துக்குள் அந்த சம்பவம் தொடர்பில் விமர்சிப்பதென்பது சாதாரணமானதென நான் நினைக்கவில்லை.

விசாரணையொன்று நடத்துவது என்பது இலகுவான காரியமல்ல அதனை நினைத்தவாறு 24 மணி நேரத்துக்குள் முடிக்கவும் முடியாது. விசாரணை நடத்தப்படும்போது பல்வேறு கோணங்களில் பார்க்கவேண்டிய பல விடயங்கள் உள்ளன. அந்த விசாரணைகள் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ள கூடிய விடயங்கள் உள்ளன. மேலும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

எனவே எந்த ஒரு விசாரணைகள் தொடர்பிலும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவைப்படுமென நான் நினைக்கின்றேன். இதற்காக பல மாதங்கள் எடுக்கவேண்டும் என்று நான் கூறவில்லை குறைந்தபட்சம் சில நாட்களாவது தேவைப்படும் என்று நான் நினைக்கின்றேன்.

எனவே இது அன் சம்பவமொன்று நடைபெற்று அது தொடர்பான விசாரணைகள் முடிவு பெறுவதற்கு முன்னர் அந்த விசாரணை தொடர்பில் விமர்சிப்பது என்பது நியாயமில்லை.

தேவாலயங்கள், விகாரைகள் உள்ளிட்ட அனைத்து மத தலங்களில் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம்.

சம்பவத்தில் மேற்படி தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த கைக்குண்டை அங்கு வைத்த சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரதிபலனாக இன்னும் பலர் விசாரணைகளுக்காக கைது செய்யப்படவுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சகல சந்தேகநபர்களும் சட்டத்திற்கு முன் கண்டிப்பாக நிறுத்தப்படுவார்கள் என்று நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் என்னால் உறுதிமொழி வழங்க முடியும் என்றார்.

குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் அதனால் சி சி ரீ வி சரியான நடவடிக்கை எடுக்க ப்படவில்லையென பேராயர் கர்தினால் குற்றம்சாட்டியுள்ளார் இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் :-

பேராயர் கர்தினால், எதனைக் கூறினாலும் அவர் கூறுவதை விட பல கோணங்களில் சிந்தித்து உரிய விசாரணைகளை தேவைக்கேற்ப மேற்கொள்வதற்கு தேவையான சகல திறமைகளும் சிஐடியினருக்கும் போலிஸாருக்கும் இருக்கின்றது.சட்டம் தெரிந்த விசாரணைகள் தொடர்பில் நன்கு தெரிந்த இதற்கு முன்னர் பல விசாரணைகளை மேற்கொண்ட இவ்வாறான விசாரணைகள் தொடர்பில் அனுபவமுள்ள அதிகாரிகளே இந்த விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனவே அவர்களது விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நாம் இடமளிக்க வேண்டும்.

எனவே இந்த விடயத்தில் நாங்கள் அவசரப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...