- உலக வங்கியின் ரூ. 374 மில்லியன் நிதியில் 16 விற்பனை நிலையங்களுடன்
தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட 'டொம்லின் பூங்கா' மற்றும் 'சஹஸ் உயன நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
டொம்லின் பூங்காவின் நினைவுப் பலகையை நேற்று பிரதமர் திறந்துவைத்தார். பிரதமர் அங்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் முதன்மை ஆலோசகர் எம்.எம்.ஜே.இ.ஜி. பண்டார விளக்கமளித்தார்.
யாத்திரிகர்கள் இளைப்பாறுவதற்கு அறைகள், சுகாதார வசதிகள் மற்றும் 16 விற்பனை நிலையங்களை கொண்ட டொம்லின் பூங்காவை நிர்மாணிப்பதற்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செலவான தொகை ரூ. 374 மில்லியனாகும்.
அதனை தொடர்ந்து சஹஸ் உயன 'நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா'-இற்கு விஜயம் செய்த பிரதமர் அதன் நினைவு பலகையை திறந்து வைத்தார். திறந்தவெளி அரங்கு, கைவினைப்பொருட்கள் கட்டிடத்தொகுதி, உணவருந்தும் பகுதி மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் கொண்ட இந்த பூங்காவில் ஓய்வெடுக்கும் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி தேரரும் இதன்போது பங்கேற்றிருந்தார்.
அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டறுவே உபாலி தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.
“இந்த நகரம் 1312 ஆம் ஆண்டு நான்காம் பராக்கிரமபாகு மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில், நமது தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில், அந்த நகரத்தின் செல்வ வளத்தை எமக்கும், நமது நாட்டிற்கும், நமது குடிமக்களுக்கும் திரும்பக் கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இன்றைய ஜனாதிபதி இந்த நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். வரலாற்றில் மிகவும் வலுவான தலைமை மற்றும் வலுவான அரசாங்கத்தின் கீழேயே வளமான மக்கள் இருந்துள்ளனர்.
நமக்கு பல ஆட்சியாளர்கள் இருக்கலாம் ஆனால் தலைவர்கள் அவசியம்.
எனவே அந்தத் தலைமையின் கீழ் தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் அமர்ந்து இந்நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கருத்துகளும் அணுகுமுறைகளும் குறிப்பாகத் தேவை.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், நான்கு காரணிகள் கவனிக்கப்பட வேண்டும்.
முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். இரண்டாவது விடயம் அவர்களின் கடமையைப் பற்றி சிந்திக்க வேண்டும். மூன்றாவதாக, தமது குடும்பம் குறித்தும் அடுத்ததாக தம்மை பற்றியும் சிந்திக்க வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் அதனை தலைக்கீழாகவே பின்பற்றுகிறார்கள், முதலில் தங்களைப் பற்றியும், பின்னர் குடும்பத்தைப் பற்றி, பின்னர் கடமையைப் பற்றி, இறுதியாக நாட்டைப் பற்றி சிந்திக்கிறார்கள். எனவே, அந்தப் பாதையை மாற்றுவதற்கான நாட்டின் தலைமை இப்போது எங்களிடம் உள்ளது.
எனவே நாம் நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நாட்டில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பிரதமருக்கு அதிமேதகு ஜனாதிபதிக்கு மட்டும் பொறுப்புகள் வழங்கப்படுமானால் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவது கடினமாகும். எனவே, குடிமக்களாகிய நாம் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது உண்மையில் முக்கியமானது. அதிகாரப் போட்டியை வீழ்ச்சியடையச் செய்ய அதனை உதாசீனப்படுத்த முற்பட்டால், மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டும், ஆனால் இது போன்ற நல்ல வேலையை இங்கே பாராட்ட வேண்டும்” என வணக்கத்திற்குரிய அனுநாயக்கர் தெரிவித்தார்.
வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் மற்றும் சமூகப் பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,
“கண்டி அதிவேக நெடுஞ்சாலை என்பது உங்கள் காலத்தின் அடிக்கல்லை அமைக்க நீங்கள் கனவு கண்ட ஒரு முன்னாள் திட்டமாகும். உங்களைப் போலவே மஹாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்களை சந்திக்க செல்லும் போது அவர்கள் கேட்பதும் அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகள் எப்படி என்றே எம்மிடம் கோருவர். நேற்றைய தினம் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்த மற்றொரு நாள்.
எஞ்சியவற்றை கலகெதர மற்றும் கடவத்தை மீரிகம பகுதி வரையான பகுதிகளை ஒன்றரை அல்லது இரண்டு வருடங்களுக்குள் முடிக்குமாறு பிரதமர் தெளிவான உத்தரவை வழங்கியதை நாம் பார்த்தோம்.
அத்துடன் எமது தலதா மாளிகையில் தரிசனம் செய்ய வரும் மக்களுக்கும் பக்தர்களுக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு கண்டியில் இடமில்லை. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து பேருந்தில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தம்மை சுத்தம் செய்து கொள்வதற்கும், பூஜைக்கு தயார் செய்து கொள்வதற்கும், வழிபாட்டிற்கு தயாராவதற்கும் என நான்கு மாடி கட்டிடம் இத்திட்டத்தின் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.”
கண்டி மேயர் கேசர சேனாநாயக்க,
“30 வருடகால பயங்கரவாதத்தை ஒழித்து இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டைக் காத்த துணிச்சல்மிக்க தலைவராக பிரதமர் இலங்கை வரலாற்றில் இடம்பெறுகிறார். பிரதமர் மக்களால் மதிக்கப்படும் மக்கள் தலைவர் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு இன்றுடன் 52 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. கொவிட் தொற்றுநோயால் நாம் அனைவரும் பல சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில் இந்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கிடைத்தமையினால் நாமும் கண்டி மக்களும் பாக்கியவான்கள். இதற்காக கண்டி மாநகர சபையின் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதயன கிரிந்திகொட, கண்டி மேயர் கேசர சேனாநாயக்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மத்திய மாகாண பணிப்பாளர் பீ.குணதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Add new comment