தைப்பூசம்

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் சிறப்பு வழிப்பாட்டிற்குரிய புனித விரத தினமாகும். இது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் நாடுகளில் முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் ஒரு பெரும் புனித விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் தமிழ் பஞ்சாங்கப்படி வரும் பத்தாவது மாதமாகும்.

இது பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். சில வருடங்களில் பௌர்ணமியானது பூச நட்சத்திரத்திற்கு முன்னும் பின்னும் வரும் தினங்களும் உண்டு. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும்நேரம் நடத்தப்படுகிறது.

தைப்பூச திருவிழாவானது தமிழ்நாடு, இலங்கைத், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா,மொரீசியஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்படும் விழாவாகும்.இவ் வருடம் தைப்பூசத் திருநாள் நாளை செவ்வாய்க்கிழமை 18.01.2022 அன்று பௌர்ணமிக்கு மறு தினமான பிரதமைத் திதியில் தோன்றுகின்றது.

தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக பொருந்திய "தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த" என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

பிற்கால சோழர் ஆட்சியில் தைப்பூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஷ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக சோழர் கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஓர் வரலாற்று ஐதீகமும் உண்டு.

முருகன் தமிழ்க்கடவுள் ஆவார். முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவசேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால் இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார். தைப்பூசத்தன்று முருகன் தரரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடனிருந்து சிதம்பரத்தில் ஆனந்தத் திருநடனம் ஆடி, தரிசனம் அளித்த நன்நாள் தைப்பூசம் என தில்லைவாழ் அந்தணர் புராணம் கூறுகின்றது.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, தில்லை நடராஜரை இரண்யவர்மன் எனும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்ததும் ஓர் தைப்பூச நன்நாளிலே ஆகும். இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடாத்தப்படுகின்றன. தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ்
கம்பளை


Add new comment

Or log in with...