"உன் பொருட்டு எழுந்த அலர்"

பாதிக்கப்பட்ட தோழியின் சாடல்

களவுக் காலத்தில் தலைவனின் வருகையில் சிலவேளை இடையீடு ஏற்பட்டுவிட்டால் தலைவி மிகவும் வருந்துவாள்.

தன்னை விரும்பும் தலைவன் தன்னை களவில் கண்டு கூடியதில்லை என்று ஒருவேளை பொய்யாக சூளுரைத்து விட்டால் என்ன செய்வது? அப்பொழுது சாட்சிக்கு யாரை அழைப்பது? என்ற மனக்கலக்கம் தலைவியிடம் ஏற்படுவதுண்டு.

இவ்வாறு வருந்தும் தலைவி ஒருத்தியின் மனநிலையை கபிலர் குறுந்தொகையில் எடுத்துரைக்கின்றார். இவ்வாறு தலைவன் பொய்ச் சூள் உரைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால் அது இரங்கத்தக்கதாகி விடும்.

தனக்கும் தலைவனுக்கும் இடையேயான களவினை ஊரார் அறிந்துவிட்டால் எழக்கூடிய 'அலர்'மற்றும் 'அம்பல்' தூற்று தலுக்கு அஞ்சும் தலைவியின் 'பெண் தன்மை'யை தலைவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது தலைவியின் நிலை இரங்கத் தக்கதா கிவிடும்.

ஏதோ காரணத்தால் தலைவன் அவளை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் பொழுது தலைவி தனக்குரியோரிடம் அதனை தெரிவிப்பாள். பின்பு அவ்வூரிலுள்ள சான்றோரின் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெறும். தலைவனது கூற்று பொய் என்று நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு உரிய தண்டனை சபையினரால் உடனே வழங்கப்படும். அந்தத் தண்டனை என்ன என்பதை தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடல் (அகநானூறில்) கூறுகிறது.

தலைவன் ஒருவன் தனது இல்லத்தில் தன் மனைவியுடன் உறைந்து இருந்து மகிழ்வதை தவிர்த்து பரத்தையர் சேரி சென்று தங்கிவிட்டு பின்பு தனது இல்லத்திற்கு திரும்புகிறான். இதனை அறிந்த தலைவி தலைவனின் மீது சினம் கொள்கிறாள். வீட்டினுள் நுழைய அவன் தடுக்கப்படுகின்றான்.

அப்பொழுது தோழி பின்வருமாறு கூறுகின்றாள்.

தலைவனே நீ பொய் கூறாதே. உன்னுடைய வஞ்சனையை நான் அறிவேன். உனது பரத்தமை செயல் வெளிப்பட்டமையை நீ அறியவில்லை.

நேற்றைய தினம் மையுண்ட அழகிய கண்களையுடைய பரத்தையுடன் வைகை யாறு புதிய நீரில் ஆடி நீ மகிழ்ச்சியுடன் இருந்தாய். இதனை அறிந்துவிடாமல் பரத்தையர் கூட்டம் மறைத்தாலும் மறைக்க முடியாமல் ஆகிவிட்டது.

அதாவது ஊர் சிரித்து விட்டது. அது எப்படி இருந்தது தெரியுமா?

என மேலும் அவள் தொடர்ந்து கூறுகிறாள். இக்கூற்று தான் அத்தண்டனை குறித்துக் கூறுகிறது. கள்ளூர் என்றொரு ஊர் இருந்தது. அங்கு அறமற்ற இளைஞன் ஒருவன் இளைய பெண் ஒருத்தியை காதலித்தான்

பின்பு அவளது அழகினையும் கவர்ந்து கொண்டு விட்டான். ஆனால் பிந்தைய ஒரு நாளில் நான் இவளைப் பார்த்தறியேன் என்று சூளுரைத்தான். இந்த சூழ்நிலையானது பொய் என்பது அவ்விருவரின் களவு கூட்டத்தை அறிந்த சான்றோர் சிலரால் நிரூபிக்கப்படுகிறது

ஆதலால் அவர்கள் இரங்கத்தக்க அத் தலைவிக்கு சாதகமாக சாட்சி கூறுகின்றனர் ஏமாற்றும் அவனை தண்டிக்கவும் முடிவெடுக்கின்றனர்.

அவனுக்கு வழங்கப்படும் தண்டனையை கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். அவர்கள் செய்த அந்த ஆரவாரத்தை விட பெரியதாயிற்று என்று உன் பொருட்டு எழுந்த அலர் என்கிறாள் தோழி.

அக்காலத்தில் பெரிய குற்றங்களின் தீர்வு காண அரசவைக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இதுபோன்ற ஊர் அளவிலான காதலித்தல் தொடர்பான குற்றங்கள் ங்கள் அந்தந்த ஊரிலுள்ள சான்றோரால் விசாரிக்கப்பட்டு அவற்றிற்குரிய தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன என்பதை அறிய முடிகிறது.

எவ்வாறாயினும் காலந்தோறும் காதல் விவகாரத்தில் ஆண்களே பொய் கூறியும் ஏமாற்றியும் வந்திருக்கின்றனர் என்பதை அறியும் போது சற்று கவலையாகத்தான் உள்ளது.

எஸ். சுப்புரெத்தினம்...


Add new comment

Or log in with...