டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும் விலகினார் விராட் கோலி

டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்தும் விலகினார் விராட் கோலி-Virat Kohli Steps Down as India Test Cricket Captain

- 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகள்

2015 முதல் தான் வகித்து வந்த டெஸ்ட் கிரிக்கெட் தலைமைத்துவ பதவியிலிருந்து இருந்து நிரந்தரமாக விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து கோலி இன்று (15) இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள கணக்குகளில் அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

 

கடந்த 7 வருடங்களாக கடுமையாக பாடுபட்டு அணியை சரியான பாதைக்கு இட்டுச் சென்றதாக தெரிவித்துள்ள அவர், இப்பணிகளை நேர்மையை மாத்திரம் நோக்காகக் கொண்டு மேற்கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பயணத்தில் பல்வேறு எழுச்சியையும் வீழ்ச்சியையும் தான் சந்தித்ததாக குறிபிட்டுள்ள கோலி, அதற்காக எச்சந்தர்ப்பத்திலும் தனது முயற்சிகளையோ, தனது நம்பிக்கையையோ இழக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். தான் செய்த அனைத்து விடயங்களிலும் எப்போதும் தனது 120 வீதத்தினையே வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை வழி நடாத்துவதற்காக இந்த நீண்ட காலத்தை சந்தர்ப்பமாக வழங்கிய இந்திய கிரிக்கெட் சபைக்கு (BCCI) தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காமல், தனது பதவியின் முதல் நாளிலிருந்து தான் அணிக்காக கொண்டிருந்த நோக்கத்தை நிறைவேற்ற பாடுபட்ட அனைத்து அணி வீரர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்த்திரிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள விராட் கோலி, தன் மீது நம்பிக்கை கொண்டு, இந்தியாவின் கிரிக்கெட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய ஒருவர் எனவும், ஒரு அணித் தலைவனாகவும் தன் மீது நம்பிக்கை வைத்த எம். எஸ். தோனிக்கு மிகப் பெரும் நன்றியை தெரிவிப்பதாக, விராட் கோலி தனது பதவில் குறிப்பிட்டுள்ளார்.

கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான இந்திய அணித் தலைவராக தனது பெயரை நிலைநாட்டியுள்ள நிலையில் இவ்வாறு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை வெல்வதற்கு தலைமை வகித்த அவர், அதன் மூலம் இந்திய அணியை ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கும் கொண்டு சென்றார்.

விராட் கோலி ஏற்கனவே ஒரு நாள் மற்றும் ரி20 அணித் தலைவர் பதவிகளிலிருந்தும் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...