இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சிரேஷ்ட, பிரதி தலைவர்களாக மருதமுனை நியாஸ், புத்தளம் நஜீம்

இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித்தலைவராக மருதமுனையை சேர்ந்த கமு/ புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.முகம்மட் நியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் ஐ.ஏ.நஜீம் சிரேஷ்ட உதவித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப் பதவிக்கு புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபரொருவர் பதவி வழியாக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

புத்தளம் சாஹிரா கல்லூரியின் உதைபந்தாட்டம் உட்பட பாடசாலைகளின் உதைபந்தாட்டத் துறை மேலும் அபிவிருத்தி அடைய அதிக பட்ச பங்களிப்பை தாம் வழங்கவுள்ளதாக அதிபர் ஐ.ஏ.நஜீம் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கல்வியமைச்சில் வைத்து கருத்து தெரிவித்தார்.

அத்துடன் கல்வி அமைச்சில் (12) நடைபெற்ற பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் இந்த ஆண்டிற்கான (2022) நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இத் தெரிவில் இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளை பெற்று உப தலைவராக இவர் செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த எம்.எம்.முஹம்மட் நியாஸ் 1967 ஆம் ஆண்டு பிறந்தவராவார். தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் பின்னர் உயர் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் பெற்றக் கொண்ட இவர் 1990 ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று அல்-மனார் மத்திய கல்லூரியில் தனது கற்பித்தல் சேவையை ஆரம்பித்தார்.

2012 ஆம் அண்டு அதிபர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றில் பிரதி அதிபராக கடமையாற்றினார். 2014 ஆம் ஆண்டு பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் பொறுப்பதிபராக கடமையை பொறுப்பேற்றார்.

இவரது காலத்தில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் பல சாதனைகளை பெற்றுக் கொண்டதுடன் பல்வேறு வளர்சிப்படிகளையும் தொட்டது எனலாம். கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டிற்கு அப்பால் விளையாட்டு, கலை, இலக்கியம் என்று இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் படசாலை பல முன்னெற்றங்களை பெற்றுள்ளன.

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு பாடசாலை சமூகம் மற்றும் பிரதேச நலன்விரும்பிகள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

பெரியநீலாவணை விசேட, புத்தளம் தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...