பெண் என்று மட்டந்தட்டியவர்களுக்கு மத்தியில் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள்

- அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஓட்டும் ஒரே ஒரு பெண்

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று காலத்தை கழிப்பவர்கள் மத்தியில் இடைவிடாத முயற்சியால் விஸ்வரூபம் பெற்றவர்கள் ஒரு சிலரே. அவ்வரிசையில் லக்ஷியும் ஒருவராவார்.

சமத்துவம் என்பதற்கு அர்த்தம் கற்றுத் தரும் வகையில் ஆணுக்குப் பெண் நிகரானவள் என்ற அம்சம் பலரால் பல சமூகங்களில் நிலைநாட்டப்பட்டு வருகின்றது. ஆணையும் பெண்ணையும் இரு வேறு குழுக்களாக வகைப்படுத்தியவர்கள் ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும் தனித்தனியாக கட்டுப்பாடுகளை விதித்தனர். சமூக கட்டமைப்பில் யாவரும் இங்கு சமமானவர்கள். உடல் தோற்றத்தினால் மட்டுமே பெண்களும் ஆண்களும் பிரிக்கப்படுகின்றனரே தவிர சாதனைகளாலும் திறமைகளாலும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளார் லக்ஷி சசிந்தா.

சமூகம் கட்டமைத்த பால்நிலை வார்ப்பில் பெண்ணுக்கு என பல வரையறைகள் காணப்படுகின்றன. பெண்கள் ஆசிரியர் தொழிலுக்குத்தான் தகுதியானவர்கள் என்பதை பலர் காலமாக கண்மூடித்தனமாக நம்புகின்ற பிற்போக்கான சமூகத்திலிருந்து பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு லக்ஷி சான்றாகியுள்ளார்.

மாத்தறை தெவிநுவர கிராமத்தைச் சேர்ந்த ஹல்ப கருணாசேன மற்றும் தயாவதி என்போருக்கு மகளாக இவர் 1979 ஆம் ஆண்டு பிறந்தார். ஐந்து சகோதர சகோதரிகளுடன் தாய்க்கு இரண்டாவது மகளாக பிறந்தவராவார்.

சாதாரணமாக பாடசாலைகளில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்கும் கேள்விகளில் உங்கள் எதிர்கால லட்சியம் என்ன என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.

அதற்கு பல மாணவர்களின் பதில் ஆசிரியராக வேண்டும் வைத்தியராக வேண்டும். என்ஜினியராக வேண்டும் என்பனவே காணப்படும் . ஆனால் அத்தகைய பொதுவான ஆசைக்கு அப்பாட்பட்டு தான் ஒரு பஸ் ஓட்டுனநராக வரவேண்டும் என்பதை எதிர்கால இலக்காக இவர் கொண்டிருந்தார். தற்போது தன் கனவை நனவாக்கி அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஓட்டும் ஒரே ஒரு பெண் ஓட்டுநராக வலம் வருகின்றார்.

லக்ஷி சசிந்தாவிற்கு சிறுவயதிலிருந்தே தான் ஒரு பஸ் ஓட்டுநர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆரம்ப கல்வியை மாத்தறை சுஜாதா பாலிகா வித்தியாலயத்தில் மேற்கொண்டு உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பட்டப்படிப்புக்கு தயாராகினர். ஆயினும் இவரது கனவு தான் ஒரு சிறந்த பஸ் ஓட்டுநராக வர வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது.

தன் தந்தையிடம் இருந்த ஒரு சிறிய கராஜிலேயே தன் சிறு பராய காலத்தை அமைத்துக் கொண்டார். இக்காலத்தில் வாகனங்கள் மீது ஏதோ ஒரு அலாதிப் பிரியம் இவருக்கு இருந்தது. பழுது பார்ப்பதற்காக அசோக் லேலண்ட் பஸ் வாகனங்கள் வரும்போது ஓட்டுநர் ஆசனத்தில் ஏறியிருந்து கொள்வாராம். ஸ்டியரிங்கைச் சுழற்றும் போது பெருமகிழ்ச்சி கொண்டு துள்ளிக் குதிப்பது இவரது வழக்கம். தன் தந்தையிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாகனங்களைச் செலுத்த கற்றுக் கொண்டுள்ளார்.

சிறுவயதில் வாகனங்கள் மீது ஈடுபாடு கொண்டமைக்கு இவரது தாயும் தந்தையும் விருப்பம் தெரிவித்திருந்தனர். 13 -14 வயதாகும் போது அனைத்து வாகனங்களையும் செலுத்தக் கூடிய ஆற்றலை பெற்றிருந்தார். அதே நேரம் தன் தந்தைக்குச் சொந்தமான ஜீப் வாகனம் ஒன்றை ஓட்டி பழகுவதும் வழக்கம். இதன்போது தானாகவே முயன்று வாகனத்தை செலுத்தக் கற்றுக் கொண்டுள்ளார்.

உயர் தரத்தை முடித்துவிட்டு வீட்டில் இருந்த காலத்திலேயே தனக்கான துறையொன்றைத் தெரிவு செய்து கொண்டார். பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வரும் சேவை தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்தது.

18 வயதில் வாகனங்களை ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொண்டார்.இலகு வாகனங்களை செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் இலகுவாக கிடைத்து விடும். ஆனால் கனரக வாகன அனுமதிப்பத்திரம் அவ்வாறல்ல .அதற்கு கடின உழைப்பு அவசியமாகும். அதற்காக ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தனக்கான உரிய தகுதிகளை வளர்த்துக்கொண்டால் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் பெற எவ்வித தடைகளும் இல்லை என அறிந்து 2008ஆம் ஆண்டில் அதனையும் பெற்றுக்கொண்டார்.

லக்ஷி தன் முதற்கட்ட செயற்பாடாக பாடசாலை பஸ் சேவையை ஆரம்பித்தார். மாத்தறையில் உள்ள பல பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் பணியை தன் தலையாய பணியாக கொண்டு செயல்பட்டhர். பெண்ணொருவர் வாகனத்தை செலுத்துவதால் பெற்றோர் அதிக விசுவாசம் கொண்டு இருந்தனர். அவர்களின் விசுவாசத்திற்கு அமைவாக ஏற்றிச் செல்லும் பிள்ளைகளின் மீது அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் செயற்பட்டமை தனக்கு திருப்தியான செயலாக அமைந்தது என சுட்டிக்காட்டுகின்றார்.

12 வருடம் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பணியை உளமார்ந்து ஆற்றியதையிட்டு பெருமை அடைகின்றார். பெண்ணொருவர் ஓட்டிச் செல்லும் வாகனத்தை மிகவும் ஆச்சரியமாக வீதியால் செல்பவர்கள் பார்ப்பார்கள். பலர் ஆச்சிரியத்தில் அவரை வாழ்த்தினார்கள் ஆதரித்தார்கள் ஆனால் மறுபுறம் கிண்டல் கேலிகளுக்கும் எவ்வித குறையும் இருக்கவில்லை.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தன் பயணத்தை தொடர்ந்து வந்த இவருக்கு கதவுகள் திறக்கப்பட்டன. அது காலி -மாத்தறை அதிவேக பாதையாக அமைந்தது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அதிவேக போக்குவரத்துக்காக விண்ணப்பித்த முதல் நபரும் இவரே.

அதிகாரத்தில் இருந்தோர் ஒரு பெண் என்ற காரணத்தினால் மட்டந்தட்டினர். அதனை தகர்த்தெறிந்து அதிவேகச் சாலையில் சுதந்திர பறவையாக பயணிக்கத் தொடங்கினார் . தனி ஒரு பெண்ணாக போராடி பல புறக்கணிப்புகளுக்கு மத்தியில் நின்று தற்போது மாத்தறை - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பிரகாசிக்கும் ஒரே ஒரு பெண்மணியாக திகழ்கின்றார். இடைவிடாத முயற்சியால் இன்று மூன்று சொகுசு வாகனங்களுக்கு சொந்தக்காரராக தன் பயணத்தை தொடர்ந்து வருகின்றார். 20 வருடகாலமாக அயராத உழைப்பின் பயனை அடைந்துள்ளார்.

பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று காலத்தை கழிப்பவர்கள் மத்தியில் இடைவிடாத முயற்சியால் விஸ்வரூபம் பெற்றவர்கள் ஒரு சிலரே. அவ்வரிசையில் லக்ஷியும் ஒருவராவார்.

குடும்பம் குழந்தைகள் எனும் குறுகிய வட்டத்திற்குள் தம்மைக் குறுக்கிக் கொள்ளாது சிறகுகளை விரித்து பறக்கத் தயாராக உள்ள பெண்களுக்கு தன் அனுபவ பயிற்சியளித்து ஊக்குவிக்கத் தயாராக உள்ளார். தன் குடும்பப் பொறுப்பையும் தொழிலையும் சமமாக எண்ணி இரண்டையும் சரிசமமாக ஆற்றி வருகின்றார். தன் வெற்றிக்கு காரணமான தந்தையும் கணவரையும் எண்ணி பெருமிதம் கொள்கிறார். பெண்பிள்ளைகளுக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதுவரை காலமும் அன்னை தெரேசாவையும் கல்பனா சாவ்லாவையும் உதாரணம் காட்டி வளர்த்த காலம் போய் இன்று உதாரணம் காட்டக்கூடிய சாதனையாளர்கள் எமது சமூகத்திலேயே எமக்கு அருகிலேயே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

தனக்குள் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து தனக்கு விருப்பமான துறைகளில் மிளிர அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். பெற்றோர் தம் பிள்ளைகள் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கும் போது அவர்கள் எதிர்காலத்தில் சுதந்திரமாக செயற்படுவதற்கும் சரித்திரம் பேசும் சாதனையாளராக மாறுவதற்கும் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் .

எஸ். மங்களதர்ஷினி
4ஆம் வருடம்
ஊடகக்கற்கைகள் துறை
யாழ்.பல்கலைக்கழகம்


Add new comment

Or log in with...