இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும்

இலங்கையின் உறுதியான, நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும்-Indian Foreign Minister S Jaishankar-Sri Lankan Finance Minister Basil Rajapaksa.jpg

- இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் உறுதியளிப்பு

இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் ஒன்லைன் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது, 400 மில்லியன் அமெரிக்க டொலர் இடமாற்று வசதியின் (swap facility) நீடிப்பு மற்றும் 515.2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒத்திவைக்கப்பட்ட ACU தீர்வு ஆகியன தொடர்பில் சாதகமான கலந்துரையாடலை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களுக்கான 1 பில்லியன் டொலர் காலக் கடன் வசதி மற்றும் எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை முன்கூட்டியே செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஏனைய சர்வதேச பங்காளிகளின் முன்முயற்சிகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வலு சக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக, ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அவசியமான, இந்தியாவினால் கருதப்படும் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையில், இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...