தடுப்பூசி பெறாதோருக்கு ஒமிக்ரோன் திரிபு ஆபத்து

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு டெல்டாவை விட கடுமையாக இல்லையென்றாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் இதைத் தெரிவித்தார்.

உலக நாடுகள், மக்கள்தொகையில் 40 வீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலக்கு கொண்டுள்ளன. இருப்பினும், 90க்கும் மேற்பட்ட நாடுகள், அந்த இலக்கை எட்டவில்லை என்றார் அவர்.

ஆபிரிக்காவில் 85 வீதத்தினருக்கும் அதிகமானோர் இன்னும் ஒருமுறை கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. வாராந்த வைரஸ் தொற்று நிலவர அறிக்கையை நிறுவனம் வெளியிட்டது.

கடந்த வாரம், அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்புநோக்க, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 வீதம் அதிகரித்துள்ளது. அதாவது முன்னெப்போதும் இல்லாத அளவில் மேலும் 15 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

உலக அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்று கேப்ரியேஸஸ் கூறினார். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் இன்னொரு வகை கொரோனா வைரஸ் திரிபு உருவாகும் அபாயம் அதிகம் என்று அவர் எச்சரித்தார். அவ்வகை இன்னும் எளிதில் பரவக்கூடும், அல்லது இன்னும் கொடியதாக இருக்கக்கூடும் என்று கேப்ரியேஸஸ் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...