கிறிஸ் மொர்ரிஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரரான கிறிஸ் மொர்ரிஸ் அனைத்துவகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

தற்போது 34 வயது நிரம்பியிருக்கும் கிறிஸ் மொர்ரிஸ் 2012ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 20க்கு20 போட்டி மூலம் சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தார். அதன் பின்னர் தனது தாயக ஒருநாள் அணியின் நிரந்தரவீரராக மாறியிருந்த அவர் 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் தென்னாபிரிக்க அணிக்காக எந்தவொரு போட்டிகளிலும் ஆடியிருக்கவில்லை. எனினும் கிறிஸ் மொர்ரிஸ் வெவ்வேறு நாடுகளின் 20க்கு20 லீக்குகளில் தொடர்ச்சியாக பிரகாசித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாக்கிரம் கணக்கின் மூலமாக தனது ஓய்வினை அறிவித்துள்ள கிறிஸ் மொர்ரிஸ், இனி கிரிக்கெட் பயிற்சியாளராக கவனம் செலுத்தப்போவதாக அறியக்கிடைக்கின்றது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்காக 4 டெஸ்ட், 42 ஒருநாள் மற்றும் 23 200க்கு20 போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் மொர்ரிஸ் அவற்றில் 94 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, 773 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மொர்ரிஸ் தான் விளையாடிய அனைத்து 20க்கு20 போட்டிகளிலும் 290 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் மொர்ரிஸ் இந்திய பிரீமியர் லீக் 20க்கு20 தொடர் வரலாற்றில் அணியொன்று வெளிநாட்டு வீரர் ஒருவருக்காக ஒரு பருவகாலத்தில்“ செலவு செய்திருந்த அதிக தொகையினைப் பெற்ற வீரராகவும் இன்று வரை காணப்படுகின்றார். அந்தவகையில் மொர்ரிஸினை கடந்த பருவகால இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்காக ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணி இந்திய நாணயப்படி 16.25 கோடி ரூபாய்களுக்கு (இலங்கை நாணயப்படி 44.5 கோடி) கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...