டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விசா விவகாரம்; கருத்து தெரிவிக்க மறுக்கும் ஆஸிப் பிரதமர்

அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் , செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சின் விசா நிலையைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.

அதுபற்றிக் குடிவரவு அமைச்சர் முடிவெடுப்பார் என்று பிரதமர் மோரிசன் கூறினார்.

அந்நாட்டு அரசாங்கம் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாம் முறையாக இரத்து செய்யுமா என்பது குறித்துக் குழப்பம் எழுந்துள்ளது.

அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆட்ட விவரங்களின் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையே குடிநுழைவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோக்கோவிச்சின் விசாவை மீண்டும் இரத்து செய்வது குறித்து யோசித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு அவரின் விசா இரத்து செய்யப்பட்டால், ஜோகோவிச் பெரிய பகிரங்க போட்டிகளில் 21ஆம் முறை வெற்றிபெற்று சாதனை படைப்பதற்கான வாய்ப்பில்லாமல் போகக்கூடும். பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைப்பு

அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் போட்டியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படுகிறது.

நோய்த்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக, மொத்தமுள்ள பார்வையாளர் எண்ணிக்கையில் 50 வீதத்தினர் மட்டுமே போட்டிகளைக் காண அனுமதிக்கப்படுவர்.

மெல்பர்ன் நகரில் கிருமிப்பரவல் மோசமாகி வருகிறது.

போட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் அனைவரும், உணவு உண்ணும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.

சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளும் அங்கு நடப்பில் இருக்கும்.

நேற்றுமுன்தினம் மெல்பர்ன் நகரில் 37,169 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. மேலும் 25 பேர் மாண்டனர்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை தொடங்கும் அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் போட்டியில், ஆண்கள் பிரிவின் நடப்பு வெற்றியாளர் நோவாக் ஜோகோவிச் பங்கேற்பது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்கிறது.

கடந்த வாரம் விசா விண்ணப்பத்தில் கோளாறு இருந்ததாகக் கூறி, அவுஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் அவரைத் தடுத்து வைத்திருந்தனர்.

இருப்பினும் அவரது வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கில் வெற்றிபெற்று, கடந்த திங்கட்கிழமை ஜோகோவிச் விடுவிக்கப்பட்டார்.


Add new comment

Or log in with...