நல்லுறவுக்கான பாலமாகத் திகழும் பொங்கல் பண்டிகை

நல்லுறவுக்கான பாலமாகத் திகழும் பொங்கல் பண்டிகை

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பிறந்ததும் 'தைப்பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். இலங்கை உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் முக்கிய திருநாள் தைப் பொங்கலாகும்.

மார்கழி மாதம் பிறந்து 30 நாட்கள் முடிந்த பின்னர் மறுநாள் தை மாதம் பிறக்கின்றது. தமிழர்களின் முக்கியமான திருநாளில் தைமாதம் முதல் இடத்தைப் பிடிப்பதோடு, முழுக்க முழுக்க இது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே கருதப்பட்டு வருகின்றது. சோதிட ரீதியாக பார்க்கும் போது சூரிய பகவான் புதிய ராசியில் பிரவேசித்தல் தைத்திருநாளின் முக்கியத்துவம் என்று கூறப்படுகின்றது.

உலகத்திலுள்ள மக்களின் அன்றாட தேவைகளுள் உணவு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. உலகிலுள்ள ஜீவராசிகளின் தேவையும் உணவாக இருக்கின்றது. எமது மக்கள் உயிர் வாழ்வதற்கு நெல் அரிசிச்சோறு தேவைப்படுகின்றது. இதன் நிமித்தம் உழவன் என்பவன் தன் உடம்பை வருத்தி உலக மக்களுக்கு உணவை வழங்குகின்றான். எனவே தைத்திருநாளை உழவர் திருநாள் என்றும் கூறலாம். உழவன் என்பவன் இல்லை என்றால் உலகமே பட்டினியாகும். அந்த விவசாயம் செழிக்க இயற்கை ஒத்துழைக்க வேண்டும். இயற்கை என்னும் போது சூரியபகவான் ஒளியூட்ட வேண்டும்.

வீடுகளில், ஆலயங்களில் 30 நாட்கள் மார்கழிக் கோலம் போடுவார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நீராடிய பெண்கள் வீட்டு வாசலில், ஆலயங்களில் இந்த மாக்கோலத்தைப் போடுவார்கள். அந்த கோலத்தின் நடுவில் பசுவின் சாணம் கொண்டு பிள்ளையார் செய்து அதன் மேல் மலர் ஒன்றும் வைத்து பூஜை செய்யப்படும்.

அதாவது தூபதீபம் காட்டி சூரியனுக்கு காட்டப்படும். இது 30 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும். முப்பதாவது நாளில் சாணம் மூலம் செய்யப்பட்ட முப்பது பிள்ளையார் உருவங்கள் காணப்படும். தை பிறக்கும் நாளன்று இந்து வீடுகளில் அதிகாலையிலேயே துயில் எழுந்து விடுவார்கள். அதிகாலையில் ஐந்து மணியளவில் பசுவின் சாணத்தைப் பெற்று வீட்டின் முன் வாயிலில் பரவலாக பூசப்பட்டு செப்பனிடப்படும். அதன் மீது புள்ளிக்கோலத்தைப் போடுவார்கள்.

தைத்தினத்தன்று பொதுவாக புள்ளிக் கோலம் இடுவது வழக்கமாகி வருகின்றது. கோலம் இடுவது ஊர்வன, எறும்பு போன்றவைகளும் உணவு பெற்றுக் கொள்வதற்கு வழியாகும். வீட்டில் கோலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் கரும்பு போன்றவற்றை நிறுத்தி அதில் மாவிலை, தோரணம் போன்றவற்றைத் தொங்க விடுவார்கள். பின்னர் நிறைகுடம், இரு மருங்கிலும் மங்கள விளக்கு போன்றவைகளும் அங்கு வைக்கப்படும்.

சூரியன் உதயமாகிக் கொண்டு இருக்கும் போதே பொங்கல் பானை அடுப்பில் ஏற்றப்படும். இந்த பொங்கல் அரிசி, பயறு, சீனி, சர்க்கரை, நெய் போன்றவை சேர்க்கப்பட்டு பாற்சோறாக முழுமை பெறும். இந்த சர்க்கரைப் பொங்கல் தயார் செய்யப்பட்டு படையல் செய்யப்படும். அந்த படையலுடன் பழவகைகளும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும். அதிகாலையில் சூரிய உதய வெளிச்சத்தைக் காணும் போது தீபாராதனை காட்டப்படும். அன்று எல்லோரும் சூரிய பகவானை அந்த இயற்கைக் கடவுளை நன்றியோடு வணங்குவார்கள். இந்நிகழ்வை சூரிய பகவானுக்குரிய திருவிழா என்றே கூற வேண்டும். அதே நேரம் உலகிற்கு ஒளியூட்டுபவன் என்ற வகையில் உலகில் வாழும் இந்துக்களால் வணங்கப்படும் தெய்வம் என்றே கூறலாம். உழவர்களின் முக்கிய திருவிழாவாக இது கொண்டாடப்படுவதுடன் உழவர்களினால் சேர்த்து வைக்கப்பட்ட புத்தரிசி இட்டு புது மண்பானை வாங்கப்பட்டு பொங்கலிடப்படும். இதன் போது வயலிலும் பொங்கல் வைப்பார்கள்.

வயல்களில் நெல் அறுவடையின் போது நெல்லானது மனிதனுக்கும் வைக்கோலானது பசுவிற்கும் போய்ச் சேருகின்றது. நிலமும் ஏங்கக் கூடாது அதனாலேயே நெல்லின் அடிப்பாகம் நிலத்தோடு காணப்படுகின்றது. இது வரலாற்று ரீதியாக பேசப்பட்டு வருகின்றது. தைத்திருநாளன்று படைக்கப்பட்ட பண்டங்கள் அயல் வீட்டுக்காரர்களுக்கும் வழங்கப்படுகின்றன. மற்றையோரும் வந்து தங்களின் வீடுகளிலும் இந்த உணவை உண்பார்கள். இப்படியாக சொந்தங்கள் வந்து உணவைப் பரிமாறிக் கொள்வார்கள். அன்று சைவ உணவு என்பதுடன் தமது குடும்பம் சகிதம் கோவிலுக்குச் செல்வது இந்துக்களின் முக்கிய கடமையாகும். புதிய ஆடை தரித்து அர்ச்சனைத் தட்டுக்களுடன் குடும்பம் சகிதம் செல்வதைக் காணக் கூடியதாக இருக்கும். அன்றைய தினம் நாட்டின் இந்துக் கோவில்களில் விஷேட பூஜைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்.

தைப்பிறந்து மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள். அதாவது இந்து மக்கள் தாய்க்கு அடுத்தபடியாக பசுவை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதனால் தான் 'கோமாதா என் குலமாதா’ என்கின்றோம். ஆகவே இந்து மக்கள் அதை தாய்க்கு நிகராக ஏற்றுக் கொள்கின்றார்கள். எமது நாட்டைப் பொறுத்தவரை கிராமங்களுக்குக் கிராமம் இந்தத் திருவிழா வித்தியாசப்படும்.தமிழ்நாட்டின் சில கிராமங்களில் ‘போகிப்பண்டிகை’ என்று கொண்டாடுவார்கள்.

தைப்பொங்கலுக்கு முதல்நாள் இது இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினத்தில் சில இடங்களில் பழைய புடவை எரித்தலும் மற்றும் சில இடங்களில் மறைந்த தமது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காகவும் இது கொண்டாடப்படுகின்றது. இதை தென்புல வழிபாடு என்று குறிப்பிடுகின்றனர்.

சாமஸ்ரீ க. மகாதேவன்


Add new comment

Or log in with...