தமிழர் வாழ்வில் நிலைத்து நிற்கும் சூரிய வழிபாட்டு பாரம்பரியம்

இந்துக்களின் தனிப் பெரும் பண்டிகை தைப்பொங்கல் ஆகும். தைப்பொங்கல் பண்டிகை பொங்கல் திருநாள், உழவர் திருநாள் அறுவடைத் திருநாள் எனவும் கூறப்படுகின்றது.

எமது சமய நூல்கள் தைப்பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி என்றும் கூறுகின்றன. சூரியன் தெற்கிலிருந்து வடக்காக பூமத்திய ரேகையை கடக்கும்போது தனு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்பெயர்வு இடம்பெறுகின்றது. இந்த இடப்பெயர்ச்சியே மகர சங்கராந்தி எனப்படும். இதனை உத்தராயண சங்கராந்தி எனவும் கூறுதல் வழக்கம். உத்தரம் – வடக்கு அயனம்- செல்லல். எனவே சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத் தொடக்கத்தினை உத்தராயண சங்கராந்தி ஆகும். தை தொடக்கம் உழவர்களுக்கு சாதகமானதாக அதாவது அறுவடைக்கு ஏற்ற கால ஆரம்பமாக அமைவதனால் முதல் நாளினை பண்டிகை திருநாளாக இந்துக்கள் வழக்கப்படுத்திக்கொண்டனர்.

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் தை மாதம் முதலாம் திகதியாகிய பொங்கல் தினத்தில் இந்துக்கள் அதிகாலையில் துயில் எழுந்து நீராடி புத்தரியில் பொங்கலிட்டு விசேட சமய வழிபாடுகளில் ஈடுபடுவர்.

தமிழ் மொழியானது சூரியக் கடவுளிடமிருந்து தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது. இதன் பின்னர் முருகக் கடவுள் அகத்தியருக்கு அருளச் செய்தார். சிவபெருமான் தமிழை அகத்தியருக்கு சொன்னார். இந்த மரபு ரீதியான 2 புரான தத்துவப்படி முருகன், சிவன் என்னும் பெயர்கள் ஞாயிற்றுக் கடவுளை (சூரியன்) குறிக்க வழங்கிய பெயர்கள் என அறிய முடிகின்றது.

தமிழ்மொழி சிவனோடும் முருகனோடும் சைவத்தோடும் பிரிக்க முடியாத தொடர்பினை கொண்டது எனலாம்.

தமிழ் மாதங்களில் மார்கழியும் தையும் ஹேமந்தருது என அழைக்கப்படுவது இதில் தை மாதத்திற்கு ஒரு தனி சிறப்புண்டு. இது சூரியனை மையப்படுத்தி கணக்கிடப்படும் ஆண்டின் முதல் தொடக்கம்.

இந்த உலகத்தில் உயிரினம் வாழ சூரிய ஒளி மூலப் பொருளாக உள்ளது. கதிரவன் இவ்வுலகை காக்கின்றான். “உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு” என்று சங்க நூல் பத்துப் பாட்டில் முதல்பாட்டு அமைந்திருப்பது நோக்கத்தக்கதாகும். மேலும் ஆதி சங்கரர் வகுத்த சண்மதங்களில் செனரம் – சூரிய வழிபாடு ஒன்றாக விளக்குகின்றது.

உழவனால் அறுவடை செய்துகொண்டு வரப்பட்ட புத்தரிசியுடன் புதிதாக விளைந்த கரும்பு மூலம் பெறப்பட்ட பாணியையும் பயறு மற்றும் மரமுந்திரிகை விதைகளையும் சேர்த்து பால் ஊற்றி தயாரித்த பொங்கலையும் செய்கரும்பையும் மங்களம் தரும் மஞ்சள் கிழங்குடன் கதிரவனுக்கு படைப்பது பொங்கல் நாளின் சிறப்பம்சமாகும்.

சூரிய வம்சத்தில் இராமனாய் அவதரித்தபோது சூரிய வழிபாடு செய்த மஹா விஷ்ணு தன் அடுத்த அவதாரமான கிருஷ்ணவதாரத்திலும் சூரியனை வணங்கி அதன் சிறப்பினை உலக மாந்தருக்கு எடுத்தியம்பியுள்ளார். மந்திரங்களில் உயர்ந்தது காயத்திரி மந்திரம். அந்த மந்திரமும் சூரிய பகவானைத் தான் போற்றுகின்றது. இந்த மந்திரம் விசுவாமித்திர முனிவரால் தை முதல் நாளில் எடுத்துச் சொல்லப்பட்டதாக புராண செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

கதிரவனை வணங்கும் வழக்கம் புராண காலம் முதலாக இருந்து வந்துள்ளது. சூரிய வழிபாடு ரித்வேதத்தில் தோன்றியதாக புராணங்களும் கூறுகின்றன.

இன்று ஆரம்பமாகும் உத்தராயண காலம் ஒரு புண்ணிய காலமாகும் இது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும் கருதப்படுகின்றது. பாரதப் போரில் மரணப்படுக்கையிலிருந்த பீஷ்மர் உத்தராயணத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று விருப்பப்பட்டு இக்காலத்தில் உயிர் நீத்து மோசமடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

தைப்பெங்கல் பண்டிகை என்பது ஏனைய பண்டிகைகள் போன்று அமையாது எமது உயிர்வாழ்வில் உதவி செய்த அத்தனை ஜீவராசிகளையும் நினைத்து நன்றி செலுத்தும் திருநாளாகவே அமைந்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்வது பொங்கல் பண்டிகை. உழைப்பின் உயர்வை மதிக்கும் நாளும் இதுவேயாகும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு “சோறும் தண்ணீரும் இரு மருந்தெனப்படும்” எனக் கூறுகின்றது. இதனுடன் இணைந்ததாக ‘தீப்பசி மாக் கட்டுச் செழுஞ்சோற்றுப் பாத்திரமேந்திய பாவை’ என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து தமிழர்களின் முக்கிய உணவாக அரிசிச் சோறே இருந்து வந்துள்ளது எனலாம்.

இதனை உற்பத்தி செய்யும் உழவர்கள் வாழ்வு வளமுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவுமே அக்காலத்தில் இருந்திருக்கின்றது. அன்று விவசாயிகள் இயற்கையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர். இயற்கை பொய்க்கவில்லை. உணவு உற்பத்தியில் தமிழர்களே சரித்திம் படைத்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை. இதனுடன் இணைந்ததாக பண்டிகைகளை செம்மையாக மகிழ்வுற கொண்டாடிய பெருமையும், இந்து ஆலயங்களை வானுயர கட்டி அழகுபார்த்த பெருமையும் தமிழினத்தையே சாரும். இன்று இவை எல்லாம் வரலாற்று நிகழ்வாக பதிவுகளாக மாறி வருவது கவலை தரு விடயம் எனலாம்.

பண்டிகை என்னும்போது மக்களின் ஒன்றுகூடலும் வீரதீர விளையாட்டுகள் காதல் களிப்பூட்டும் நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

எனவே பொங்கல் தினத்தில் பழையதனை அழித்தொழித்தது தீய எண்ணங்களை போக்கி மங்களமும் செளபாக்கியமும் பொங்க உறுதிபூண வேண்டும் என்பது பெரியோர் வாக்கு, பொங்கலோ பொங்கல் நாட்டுக்கும் மக்களுக்கும் வளங்களை கொண்டுவரட்டும்.

ஆர். நடராஜன் (பனங்காடு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...