சுவாமி விவேகானந்தரின் 159ஆவது பிறந்ததின நினைவுநாள் கொண்டாட்டங்கள்

சுவாமி விவேகானந்தரின் 159ஆவது பிறந்ததின நினைவுநாள் கொண்டாட்டங்கள்-Celebration of 159th Birth Anniversary of Swami Vivekananda in Sri Lanka

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் 2022 ஜனவரி 12ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விசேட நிகழ்வொன்றில் பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைமைக்குரு சுவாமி அக்‌ஷரத்மானந்தா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகள் சுவாமி விவேகானந்தரது 159ஆவது பிறந்ததின நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

சுவாமி விவேகானந்தரின் 159ஆவது பிறந்ததின நினைவுநாள் கொண்டாட்டங்கள்-Celebration of 159th Birth Anniversary of Swami Vivekananda in Sri Lankaஇதேவேளை இராமகிருஷ்ண மிஷனில் விசேட பிரார்த்தனை நிகழ்வொன்றும் அன்றைய தினம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ரேவந்த் விக்ரம் சிங்க் இப்பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு  சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் இணைய மூலமாக திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களும் ஒளிபரப்பப்பட்டன.

சுவாமியின் போதனைகளும் தத்துவங்களும் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேசத்தை கட்டி எழுப்புவதற்கு உத்வேகமாக அமைந்த நிலையில் அவரது பிறந்த தினமானது இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை நினைவுகூரும் முகமாக இந்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சு 2022 ஜனவரி 12 முதல் 13 வரையில் 25ஆவது தேசிய இளைஞர் பண்டிகையை ஒழுங்கமைத்துள்ளதுடன் இந்திய பிரதமரால் அந்நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

புத்த பெருமானின் போதனைகளாலும் சுவாமி விவேகானந்தர் பெரிதும் உள்ளீர்க்கப்பட்டிருந்தார். சந்நியாசத்தை தழுவிக்கொண்ட சுவாமி விவேகானந்தர் உடனடியாகவே புத்தபெருமான் ஞானம் பெற்ற புனித அரச மரத்தடியில் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்காக புனித நகரான புத்தகயாவிற்கு விஜயம் செய்திருந்தார். 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றில் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால சகிதம் சுவாமி விவேகானந்தர் பங்கேற்றிருந்த நிலையில் இருவரும் அங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

சுவாமி விவேகானந்தரின் உள்ளத்தில் இலங்கைக்கு விசேடமான இடம் உண்டு. 1897 ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் 11 நாட்கள் தங்கியிருந்தபோது கொழும்பு, கண்டி, மாத்தளை, தம்புள்ளை, அனுராதபுரம், வவுனியா, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டதுடன் ஆன்மீக சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார்.  சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதன் 125 ஆவது ஆண்டு நிறைவினை இவ்வருடம் அனுஷ்டிக்கும் முகமாக இராமகிருஷ்ண மிஷன், மற்றும் ஏனைய ஆன்மீக அமைப்புக்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. 


Add new comment

Or log in with...