அரசின் கொள்கைப் பிரகடனம்: சபை ஒத்திவைப்பு விவாதம் ஜனவரி 19, 20 இல்

- ஜனவரி 18 புதிய கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பம்
- ஜனவரி 18 - 21 வரை பாராளுமன்ற அமர்வுகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஜனவரி 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய ஜனவரி 19ஆம் திகதி முற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரையும், ஜனவரி 20ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணிவரையும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் பிரேரணையாக சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் நேற்று (13) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடத்திய விசேட கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜனவரி 21ஆம் திகதி பிற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல்  (திருத்தச்) சட்டமூலம், சிவில் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை குறித்த இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான  பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.


Add new comment

Or log in with...