புதிய சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் தலைமைத்துவ பண்புகளை வளர்க்க வேண்டும்

எமது தேசம் எதிர்கொள்ளும் புதிய பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் எதிர்கால இராணுவத் தலைவர்கள் தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று ( 13) தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் கெளரவத்தினை தன்னகத்தே கொண்டுள்ள எமது தேசம், அதனது இராணுவத்திடமிருந்தும் முற்றுமுழுதாக நேர்மையையும் சுயகெளரவத்தையும் எதிர்பார்க்கிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், "சுயகெளரவம் கொண்ட தலைவர்கள் போலித்தனம் அல்லது பாசாங்குத்தனத்தால் பாதிக்கப்பட மாட்டர்கள்" எனக் குறிப்பிட்டார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது முப்படைகளின் இடைநிலை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்பிற்கெதிராக வெற்றிகளை ஈட்டுவதற்கு இராணுவத்தை வெற்றிகரமாக வழிநடத்திய நாட்டின் ஆயுதப் படைகளில் இருந்த தலைசிறந்த தலைவர்களைப் பற்றிக் குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், எதிர்காலத் தலைவர்கள் எமது தேசம் எதிர்கொள்ளும் புதிய பாதுகாப்பு சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் தமது தலைமைத்துவ பண்பினை வளர்ச்சியடையச் செய்யவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். முப்படைகளின் இடைநிலை அதிகாரிகளது தலைமைத்துவ பண்புகளை தற்கால செயற்பாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு அனைத்து விதங்களிலும் தீர்க்கதரிசனம் செய்யக்கூடிய வகையில் மேம்படுத்திக் கொள்வதற்கு இந்தக் கருத்தரங்கு பயனுள்ளதாக அமையும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

"எதிர்காலங்களில் போர்களை நடாத்துவதற்கு இராணுவத்திற்கு மிகவும் திறமையான தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட அதிகாரிகள் அவசியம்", புதிய தொழில்நுட்பம் மற்றும் தலைமை நிர்வாக முறைகள் முன்னேறி வருவதால், அதிகாரிகள் அதிநவீன யுக்திகளால் மட்டுமே போராடக்கூடிய இராணுவ கலாச்சாரத்திற்கமைய தமது தொழில் வாண்மை விருத்தி பெற்றிருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு போர்வீரனில் இருந்து தேவையில் இருப்போருக்கு நண்பனாக பரிணாம வளர்ச்சியடைதல், தனக்கு கீழ் உள்ள படைவீரர்கள் தொடர்பாக அறிதல் மற்றும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளல் என்பன தொடர்பாக உணர்வுசார் அறிவின் பிரயோகத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தின் பிரதானி மேஜர்ஜெனரல் அஜித் திசாநாயக்க,ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மூலோபாய

கற்கைகள் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி ஹரிந்த விதானகே, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாலசூரிய, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தின் கடற்படை மற்றும் விமான நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் கொமடோர் பூஜித சுகததாச, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி அலுவலகத்தின் பயிற்சி மற்றும் கோட்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஷ் பெரேரா, கருத்தரங்கின் அமர்வுகளின் தலைவர்கள், பேச்சாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(ஸாதிக் ஷிஹான்)


Add new comment

Or log in with...