உள்ளூராட்சி ​தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம்

உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமையை திருத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைப்படி விரைவில் தேர்தல் நடத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் முறை சீர்திருத்தப்பட வேண்டும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனால்தான் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில்  அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த குழு செயற்பட்டு வருகிறது.

வேறு பல காரணங்களினால் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஒரு வருடத்திற்கு நீடிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது. முடிந்தளவு விரைவாக உள்ளூராட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தம்புள்ள நகர சபை புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனக பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய உள்ளுராட்சி தேர்தல் முறை தொடர்பில் சமூகம் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் காணப்படுகின்றன. அதனால்தான் இது தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நிலைமை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளூராட்சி சபைகளினால் செயல்பட முடியவில்லை. திட்டமிட்டபடி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. இதனாலேயே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இழந்த இந்த இரண்டு வருடங்களுக்கு நியாயமான கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான மூன்று சட்டங்களினூடாகவும் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நான் அவற்றை நியாயமான காரணங்களுக்காக பயன்படுத்தியுள்ளேன்.

ஆனால் கடந்த அரசாங்கம் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எவ்வித நியாயமான காரணமும் இன்றி ஒத்திவைத்தது. அரசாங்கமாக நாம் மக்களின் ஜனநாயக உரிமைகளை எப்போதும் மதித்து வருகிறோம்.ஆனால் தற்போது நாட்டு மக்கள் தேர்தல் நடத்துமாறு கேட்கவில்லை. பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்யுமாறு தான் கேட்கின்றனர்..

நாட்டு மக்கள் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சரியான பதில் வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். (பா)

(ஷம்ஸ் பாஹிம்)


Add new comment

Or log in with...