சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க அரசாங்கத்தின் முகவரமைப்பு (USAID) வளர்ந்து வரும் தொழில்முனைவோரை அனுபவம் வாய்ந்த வணிக நிபுணர்களுடன் இணைப்பதற்காக இலவச இணையவழி வழிகாட்டல் தளத்தை இன்று தொடங்கிவைத்தது. yes.youlead.lk/ எனும் இணையத்தளத்தில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் தளமானது, இலங்கை முழுவதிலுமுள்ள ஆர்வமுள்ள தொழில்முனைவோர் அவர்கள் முன்னெப்போதும் எதிர்கொள்ளாத சவால்களை எதிர்கொள்ள உதவுவதற்காகவும் மற்றும் அவர்களது வணிகங்களின் நீண்ட கால வெற்றிக்கு உதவுவதற்காகவும் அவர்களை 100 இற்கும் மேற்பட்ட அனுபவமிக்க வணிகத் தலைவர்கள் மற்றும் விடயதான நிபுணர்களுடன் இணைக்கிறது.
"விசேடமாக பெண்களுக்குச் சொந்தமான அல்லது வலையமைப்பு வாய்ப்புகள் மற்றும் உதவி வசதிகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடைய நகர்ப்புற மையங்களுக்கு வெளியே ஆரம்பிக்கப்படும் பல தொழில் முயற்சிகள் வெற்றிபெறாமைக்கு பெரும்பாலும் காரணமாக அமைவது வழிகாட்டுதல் இன்மையாகும்." என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான USAID இன் செயற்பணிப் பணிப்பாளர் ரீட் ஈஷ்லிமேன் கூறினார். "வணிக உரிமையாளர்கள் தங்கள் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடவும் மற்றும் நிபுணர்களிடமிருந்து தற்சார்பற்ற வழிகாட்டுதலை இலவசமாகப் பெறவும் இணையவழிதளத்தை வழங்குவதன் மூலம் USAID இன் YouLead செயற்திட்டமானது இலங்கையில் தொழில் முயற்சியுடைமையினை வலுப்படுத்துகிறது." என அவர் மேலும் குறிப்பிட்டார்.
USAID இன் YouLead செயற்திட்டம் மற்றும் சஸ்னக்க சன்சத மன்றம் ஆகியவற்றிற்கிடையிலான ஒரு பங்காண்மையின் ஊடாக, வணிகங்கள் வெற்றிபெற உதவுவதற்காக தங்கள் நேரத்தையும் நிபுணத்துவத்தையும் வழங்குவதற்கு முன்வரும் தன்னார்வல வழிகாட்டிகளுடன் தொழில் முனைவோரை இந்தத் தளம் இணைக்கிறது. நீண்ட கால நிலைபேறான தன்மையை உறுதி செய்வதற்காக, வழிகாட்டிகள் மற்றும் வழிகாட்டப்படுவோரை உள்வாங்குவதற்கும், வழிகாட்டிகள் மற்றும் வழிகாட்டப்படுவோருக்கிடையிலான தொடர்புகளில் மத்தியஸ்தம் வகிப்பதற்கும் மற்றும் புகழ்பெற்ற வழிகாட்டிகளை வலையமைப்பில் இணைத்துக்கொள்வதற்கும் ஒரு தனியான குழுவினர் உள்ளனர்.
"இலங்கையில் தொழில் முயற்சியுடைமை மனப்பாங்கு மிகுதியாக உள்ளது, எனினும் பல தொழில்முனைவோருக்கு அவர்களின் சிந்தனைகளை செயற்படுத்துவதற்கான அனுபவம் இல்லாதிருப்பதுடன் ஒரு வணிகத்தை நடாத்துவதில் உள்ள சிக்கல்களை கையாளும் போது அவர்கள் தமது கவனத்தை இழக்கின்றனர். இந்த வழிகாட்டல் தளத்தின் ஊடாக, அனுபவமிக்க வழிகாட்டிகளுடன் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை சிறந்த முறையில் இணைக்கவும் மற்றும் ஒரு கட்டமைக்கப்பட்ட செயன்முறையின் ஊடாக இலங்கையில் ஆரம்பிக்கப்படும் பல தொழில் முயற்சிகளின் வெற்றி விகிதத்தை அதிகரிக்கவும் எங்களால் இயலுமாயிருக்கும்." என சஸ்னக சன்சத மன்றத்தின் தலைவர் ஹசித விஜேசுந்தர குறிப்பிட்டார்.
"தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் கல்விச் செயன்முறையின் ஒரு பகுதியாக தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள், அவர்களின் சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள அவர்கள் கையாண்ட உத்திகள் ஆகியவற்றை நாம் பரப்ப வேண்டும். இச்செயன்முறைக்கு நேரடியான ஒருவருக்கு - ஒருவர் எனும் தளத்தை இவ்வழிகாட்டுதல் வழங்குகிறது, மற்றும் தொழில் முனைவோருக்கு தேசிய அளவில் அணுகக்கூடிய இந்த சேவையை உருவாக்க ஒண்றிணைந்த USAID, சஸ்னக்க சன்சத மற்றும் அனைத்து வழிகாட்டிகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி தீபா லியனகே கருத்துரைத்தார்.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதற்கும், இளையோரை உற்பத்தித்திறனுடைய தொழில்களுடன் இணைப்பதற்கும், மற்றும் இலங்கையில் தொழில் முயற்சியுடைமையினை வலுப்படுத்துவதற்குமான YouLead செயற்திட்டமானது அமெரிக்காவிடமிருந்தான 18 மில்லியன் டொலர் பெறுமதியான ஏழு வருட மானியம் மூலம் நிதியளிக்கப்பட்டு, சர்வதேச நிறைவேற்று சேவைப் படையணியால் (IESC) நடைமுறைப்படுத்தப்படுகிறது. சஸ்னக்க சன்சத மன்றம் என்பது 1997 முதல் இலங்கையின் இளையோர்களின் திறனை அதிகரிக்க உதவிய ஒரு சமூக அமைப்பாகும்.
இச்செயற் திட்டமானது, தற்சார்புடைமைக்கு உதவி செய்வதற்கும் மற்றும் ஆரோக்கியமான, கல்வியறிவுள்ள மற்றும் தொழில் புரியும் சனத்தொகையொன்றை ஊக்குவிப்பதற்குமான அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையின் அங்கமொன்றாகும். USAID இன் பணிகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு, தயவு செய்து usaid.gov/sri-lanka எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடவும்.
Add new comment