நாடுகள் எம்மைப் பிரித்தாலும் மொழியால் நாம் இணைவோம்!

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நேற்று நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

'தமிழால் இணைவோம்' என்ற அடிப்படையில் நாம் ஒன்றுசேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது. மத மாயங்களையும் சாதி  பேதங்களையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. அதனால்தான் 'தமிழால் இணைவோம்' என்பதை நமது முழக்கமாகக் கொண்டுள்ளோம். ஒரு தமிழன் - இன்னொரு தமிழனைச் சந்திக்கும் போது தமிழைச் சொல்லி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் மற்ற வேறுபாடுகள் எதற்கும் முக்கியத்துவம் தரக் கூடாது என்ற எண்ணம் தோன்றும் என்றார் இலக்கிய மேதை மு.வரதராசனார். அத்தகைய தமிழ் வாழ்த்தை உங்களுக்கு முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழால் இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் - அயலகத் தமிழர் நாள் வாழ்த்துகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

 "உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் - பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடி இருக்கிறோம் என்றால் - தமிழன் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கின்றன. நிலங்கள் பிரிக்கின்றன. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு. 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதை தமிழ் மண்ணில் விதைத்து மொழிப்பற்றும் - 'தமிழா! இன உணர்வு கொள்' என்று முழங்கி இனமான உணர்வும் ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்! மொழிக்காக போராடிய - வாதாடிய இயக்கம் மட்டுமல்ல, மொழிகாக்க தனது தேகத்தை தீக்குத் தின்னத் தந்த தீரர்களின் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்" என்று முதல்வர் மேலும் தெரிவித்தார்.

"இந்த வரிசையில்தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317கோடி ரூபா  மதிப்பீட்டில் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கொரோனா என்ற பெருந்தொற்று காலமாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த விழாவை மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்திருப்போம். கொரோனா என்பதால் அது இயலவில்லை. ஆனால் பரந்த உள்ளம் கொண்ட நாம், காணொலியில் பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். பல நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு பெருமக்கள், பல்வேறு தலைப்புகளில் பேச இருக்கிறீர்கள். உங்கள் அனைவரது உரைகளும் தமிழை - தமிழினத்தை - தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உங்களது உரைகள் அமைய வேண்டும்.

இங்குள்ள தமிழர்களுக்கு எல்லாமுமாய் இந்த அரசு இருப்பதைப் போலவே அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.


Add new comment

Or log in with...