கொவிட் 19: 150 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கிய இந்தியா

கொவிட் 19: 150 கோடி தடுப்பூசி டோஸ்களை வழங்கிய இந்தியா-India reaches 150 crore COVID-19 vaccination doses mark

கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் 150 கோடி தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்து, இந்தியா மற்றொரு மைல்கல் சாதனை படைத்துள்ளது. இச்சாதனையின் நிமித்தம் நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும்   மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளதோடு முழு நாட்டிற்கும் இச்சாதனையை அவர் சமர்ப்பணம் செய்துள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகத்தை 'வீடியோ கொன்பிரன்சிங்க்' மூலம் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, எமது நாட்டில் 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக இந்த ஆண்டை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.

அதேநேரம் இந்தியாவும் இந்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் வாரத்திலேயே 150 கோடி  தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுக்கொடுத்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் 150 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதானது, ஒரு குறிப்பிடத்தக்க சாதனை மாத்திரமல்லாமல் நாட்டின் விருப்பத்தினது அடையாளமாகவும் விளங்குகிறது.  இது நாட்டின் புதிய நம்பிக்கையையும்  பெருமையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஓமிக்ரோன் பிறழ்வின் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான ஆரோக்கியப் பாதுகாப்பு ஏற்பாடாகும்.

இந்தியாவில் வயது வந்தோரில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இத்தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அதேநேரம் கடந்த ஜனவரி 3 ஆம் திகதி முதலான சில நாட்களுக்குள் 1.5 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு இத்தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

நோய்த் தவிர்ப்பு ஆரோக்கிய பராமரிப்பு, நியாயமான கட்டணத்துடன் கூடிய சுகாதார சேவை அடங்கலாக நாட்டின் சுகாதாரத் துறையை மாற்றியமைக்கும்  வகையிலான பிரசாரங்களும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன' என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலனோம்புதல் அமைச்சர் மன்சுக் மாண்டவுயா,   150 கோடிக்கும் மேற்பட்டளவில் கொவிட் 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்துள்ள இந்தியா, பரந்தளவில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் தொடர்ந்தும் உலகின் முன்னணி தலைவராக திகழுகிறது. இதன் நிமித்தம் மக்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்  என ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...