ஆலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் அடையாளம்

ஆலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் அடையாளம்-Hand Grenade Found-All Saint's Church Borella-Main Suspect Identified

- 13 வயதுச் சிறுவனை வைத்து சம்பவத்தை திட்டமிட்டுள்ளமை அம்பலம்

பொரளை, ஆனந்த ராஜகருணா மாவத்தையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் அதனை வைத்த முக்கிய சந்தேகநபர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதான, 29, 25, 41, 55 வயதுடைய சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், அங்கு கடந்த சில மாதங்களாக பணிபுரிந்த  55 நபரே பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

தேவாலயத்தில் உள்ள சிலையொன்றில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், அது தீப்பிடித்து வெடிக்கும் வகையில் தீக்குச்சிகள் மற்றும் ஊதுபத்தி குச்சிகளைப் பயன்படுத்தி ஒட்டும் நாடா (sellotape), இறப்பர் பட்டியின் உதவியுடன் அது குறித்த சிலையில் ஒட்டப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் அடையாளம்-Hand Grenade Found-All Saint's Church Borella-Main Suspect Identified

தேவாலயத்தில் பணியாளராக கடமையாற்றி வந்த மருதானை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபரே கைக்குண்டை வைத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்தூவ தெரிவித்துள்ளார்.

தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும், அடிக்கடி அந்த தேவாலயத்திற்குச் சென்று வரும் 13 வயதுச் சிறுவனை கைக்குண்டை வைப்பதற்காக சந்தேகநபர் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் சுமார் 16 வருடங்களாக தேவாலயத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த 09 மாதங்களாக தேவாலய வளாகத்தில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபர் இருந்த அறையிலிருந்து, கைக்குண்டு வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒட்டும் நாடா, இறப்பர் பட்டிகள், தீப்பெட்டிகள் மற்றும் ஊதுபத்தி குச்சிகள் ஆகியவற்றின் பாகங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்றையதினம் (12) பிரதான சந்தேகநபர் மற்றும் குறித்த கைக்குண்டை சிலையின் மீது வைப்பதற்கு உதவி பெற்ற சிறுவன் ஆகிய இருவரும் புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, நீதவானினால் குறித்த சிறுவனிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட SFG 87 எனும் கைக்குண்டு என அடையாளம் காணப்பட்டதோடு, நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்றையதினம் (11) பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் குறித்த கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சந்தேகநபர் இவ்வாறு செயற்பட்டமைக்கான காரணம் மற்றும் குறித்த நபர் எவ்வாறு கைக்குண்டை பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொரளை பொலிஸார் மற்றம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், பிரதான சந்தேகநபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஏனைய 3 சந்தேகநபர்களையும் நாளையதினம் (13) புதுக்கடை இல. 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...