தனியார் விமான நிறுவன தலைவருக்கு ஜன. 18 வரை விளக்கமறியல்

விமான விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சக்குராய் தனியார் விமான நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம பொறியியலாளர் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் 10ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.  

அவர்கள் இருவரும் நேற்றையதினம் நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா 172 ரக விமானம் ஒன்று அண்மையில் சிகிரியாவில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த போது கட்டான பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. அதன் போது ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர். அத்துடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று கடந்த மாதம் 22ஆம் திகதி பயாகல கடற்கரைப் பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனையடுத்து சகுரா நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை இடை நிறுத்தப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்  


Add new comment

Or log in with...