காணாமல் போன சிறுமி தொடர்பில் தாயின் உருக்கமான கோரிக்கை!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் சிறுமி இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் காணாமல் போன சிறுமி தொடர்பில் அவரின் தாயினால் நேற்று (11) திருகோணமலையில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

தரம் 8ல் கல்விகற்று வந்த எனது மகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் 8ம் திகதி முறைப்பாடு செய்திருந்தேன்.

எனினும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எனது மகளை பொலிசார் இன்னும் கண்டுபிடித்துத் தரவில்லை. இது தொடர்பாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனினும் எவ்வித பலனும் இல்லை.

எனது மகள் வகுப்பில் முதலாவது பிள்ளையாகத்தான் வருவார். நல்ல கெட்டிக்காரி. அவரை பல இடங்களிலும் நாங்களும் தேடிப் பார்த்தோம் காணவில்லை. ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்க்கின்றபோது எனக்கு பயமாக இருக்கின்றது.

மேலும், எனது பிள்ளையை எப்படியாவது கண்டுபிடித்துத் தாருங்கள் என பொறுப்பான அனைத்து தரப்பினரிடமும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...