இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவும் மூன்றாவது அலை!

இம்மாத முடிவில் கொரோனா உச்சத்தை தொடும்!

ந்தியாவில் வேகமாக கொரோனாவின் 3-வது அலை வேகமாகப் பரவி வருகின்றது. நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா 3-வது அலைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் என பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலேசான அறிகுறிகளே உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத் சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தினமும் பொசிட்டிவ் 13.29 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா 3-வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் என ஐ.ஐ.டி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் 3-வது அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, நாடு முழுவதும் ஜனவரி மாதம் இறுதியில் கொரோனா பரவல் புதிய உச்சம் பெறும். 2-வது அலையில் ஏற்பட்ட பாதிப்பை விட இந்த அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேசமயம் மார்ச் மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி 3-வது அலை முடிவுக்கு வரும்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் அதிவேகத்தில் இருக்கும். ஆனால் இந்த மாத இறுதியிலேயே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்" என்று பேராசிரியர் மனிந்திர அகர்வால் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...