பொருளாதாரம் 8 வீதத்திற்கும் மேல் வளர்ச்சி; வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பிலும் சாதனை

புதிய ஆண்டில் இந்தியா தனது அபிவிருத்தியின் வேகத்தைத் துரிதப்படுத்த வேண்டும். கொவிட் - 19 பெருந்தொற்றினால் ஏற்படும் சவால்கள் முன்னேற்ற செயற்பாடுகளைக் குறைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ள  பிரதமர் நரேந்திர மோடி, தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு நாடு முழுமையான முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் பெருந்தொற்றை  எதிர்த்துப் போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஷேட வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய  பிரதமர் மோடி,  இப்பெருந்தொற்றினால் சுகாதாரம், பாதுகாப்பு, விவசாயம், ஆரம்ப சுற்றுச்சூழல் முறைமை மற்றும் உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் 2021 இல் நாட்டில் ஏற்பட்ட சாதனைகளையும் எடுத்துக்கூறியுள்ளார்.

'2021 இல் கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக வலுவான போராட்டத்தை இந்தியா முன்னெடுத்ததையும்  அவ்வாண்டில்  மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களையும் நினைவுகூர்ந்த அவர், 145 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் 19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளக் கிடைத்தமையையும் பாராட்டினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'நாம் கடந்த ஆண்டில், பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்களின் வேகத்தை துரிதப்படுத்தினோம். நவீன உட்கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளோம். அபிவிருத்தியின் வேகத்தை நாம் மேலும் விரைவுபடுத்த வேண்டும். கொரோனா சவால்களை தோற்றுவிக்கிறது. ஆனால் அச்சவால்கள் முன்னேற்றச் செயற்பாடுகளுக்கு தடையாக அமைய இடமளிக்கலாகாது.

எமது பொருளாதாரம் 8 சதவீதத்திற்கும் மேற்பட்டளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. அது  வெளிநாட்டு முதலீட்டையும் சாதனை மிக்க வகையில்  ஈர்த்துள்ளது. அதன் பயனாக அந்நிய செலாவணிக் கையிருப்பும் பெரிதும் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.ரி வரி சேகரிப்பும்  அதிகரித்து வருகிறது. எமது நாடு இந்த நிதியாண்டில் 400 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், ஏற்றுமதியில், குறிப்பாக விவசாயத் துறையில் புதிய விடயங்களை உள்ளடக்கிய முன்னுதாரணங்களையும் உருவாக்கியுள்ளது.

அதேநேரம், பெண்களின் தற்போதைய  திருமண வயதெல்லையை 18 ஆண்டுகளில் இருந்து 21 ஆண்டுகளாக உயர்த்தி, ஆணுக்கு இணையான திருமண வயதை கொண்டு வருவதற்கான செயல்முறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...