மனித மரபணுக்களையே மாற்றும் Fast Foods!

அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் ஆபத்து!

இயற்கையின் மிகச் சிறந்த வடிவமைப்புகளில் ஒன்று மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல். உயிருள்ள நுண்கிருமிகளுக்கு எதிராகவும், உயிரற்ற திட, திரவ பொருட்களுக்கு எதிராகவும் மிகச் சரியாக செயல்பட்டு, உடல் உறுப்புகளை அழிவிலிருந்து வாழ்நாள் முழுதும் பாதுகாக்கும் வல்லமையுடன் உருவாக்கப்பட்டு உள்ளது மனித உடல்.

இந்த சீரான செயல்பாடு, மரபணுக்கள் மூலமாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும். வெகு அரிதாக இக்கட்டுக்கோப்பில் சிறு சிதைவு ஏற்படலாம். ஆனால், சமீப காலங்களில் இந்த கட்டுக்கோப்பான எதிர்ப்பாற்றல் கட்டமைப்பில் சீரற்ற தன்மை ஏற்பட்டு மரபணுக்களிலேயே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன.

நோய் எதிர்ப்பாற்றலில் மாற்றம், கோளாறுகள் ஏற்படும் போது தன் சொந்த உடல் உறுப்புகளையே எதிரியாக பாவிக்கும்; நம் சொந்த எதிர்ப்பணுக்களே நம் உறுப்புகளை அழிக்கத் தொடங்கும். எந்த உறுப்பை நோய் எதிர்ப்பணுக்கள் தாக்குகிறதோ, அந்த உறுப்பு செயலிழக்கும். இப்படி உடலே உடலுக்கு எதிராக செயல்படுவதால் ஏற்படும் நோய்களை 'தன்னெதிர்ப்பு நோய்கள்' என்கிறோம்.

இது உடல் முழுவதையோ, மலக்குடல், தைரோய்ட் சுரப்பி, மூட்டு சவ்வு, சிவப்பணுக்கள், இரத்த நாளங்கள், தோல் என்று தனிப்பட்ட உறுப்பையோ தாக்கலாம். பாதிக்கப்பட்ட உறுப்பை பொறுத்து அறிகுறிகள் தோன்றும். நுரையீரல் பாதிக்கப்பட்டால் மூச்சுத் திணறலோடு வாழ்க்கை நகரும்.

உணவு முறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், மனஅழுத்தமுமே தன்னெதிர்ப்பு நோய்களுக்கு முக்கிய காரணம். எமது உணவுச் சந்தை 32 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஆனது. இதில் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

பீட்சா, பேகர், நுாடுல்ஸ் ஆகியவை நடுத்தர மக்களால் நாகரிக குறீயிடாகவும், பொருளாதார மேம்பாட்டின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பெருவணிக நிறுவனங்களின் இந்த கருத்து திணித்தல், பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகளின் செய்முறையும், அதில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்களும் உடலை கடும் மாற்றத்திற்கு உட்படுத்துகின்றன. இவை குடலில் உள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பதோடு, தடுப்பு அரண்களையும் உடைக்கிறது. இதனால் குடல் வழியாக வெளியேற்றப்படும் நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு எதிர்ப்பாற்றல் செயல்பாட்டை மாற்றுகிறது.

இது தொடர்ந்து நிகழும் போது மரபணுக்களில் மாற்றங்கள் உருவாகும்; பலவீனமான ஒரு தலைமுறையை உருவாக்கும் ஆபத்து நிகழ்ந்து வருகிறது. மனித குடலில் வாழும் கோடிக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், உடலின் பல்வேறு செயல்பாடுகளை, மூளை செயல்திறன் உட்பட சீராக்குகின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குடலில் அழற்சி ஏற்பட்டால் மொத்த உடல் உள்செயல்பாட்டிலும் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படும்.

பழைய சோற்று கஞ்சியில் நன்மை பயக்கும் பக்டீரியாக்கள் கோடிக்கணக்கில் உள்ளன. நொதிந்த - புளித்த சோற்றில், குடல் சுவர்களை பாதுகாக்கும் உயிர் இரசாயனப் பொருட்கள் நிறைந்துள்ளன. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் தன்னெதிர்ப்பு நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். சிந்தனையில் முற்போக்குவாதிகளாகவும், உணவுப் பழக்கத்தில் பாரம்பரியவாதிகளாகவும் இருப்பது அடுத்த தலைமுறையை பாதுகாக்கும்.

டொக்டர் வி.பி.துரை...


Add new comment

Or log in with...