'அருள் பொழியும் நிழல் பாதைகள்'; ஜேம்ஸ் ஆலனின் நூல் தமிழ்மொழியில்

1901இல் ஜேம்ஸ் ஆலனின் முதல் நூலாக From Poverty to Power என்ற நூல் வெளியாகி, அவரது பெயரை நிலைநிறுத்தியது. இந்நூல் பன்னூறு பதிப்புகளைக் கண்டது. ஜேம்ஸ் ஆலன் தீவிர-ஆழ்ந்த வாசகராக இருந்தார். ஷேக்ஸ்பியர், மில்டன், எமர்சன், பிறவுனிங், வால்ட் விட்மன் ஆகியோரின் கவிதைகள் அவருக்கு மனப்பாடம். பகவத்கீதை, லாவோட்சு, புத்தரின் தம்மபோதம், பைபிள் ஆகிய நூல்களை அவர் ஆழ்ந்து கற்றார். வானவியல், கூர்ப்புக் கோட்பாடு, தாவரவியல், புவிச் சரிதவியல் ஆகியவற்றிலும் அவர் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார்.  

1905இல் தென் வேல்ஸில் லில்லி என்ற பெண்மணியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். 1903ஆம் ஆண்டு Ilfracombe என்ற இங்கிலாந்தின் தென் மேற்குக் கடலோரம் அமைந்திருந்த அழகிய சிறிய சுற்றுலாத்தலம் போன்ற ஓரிடத்திலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார்.

கடலை நோக்கிய விக்டோரியன் கால ஹோட்டல்களும், மலைக் குன்றுகளும், வளைந்து போகும் தெருக்களுமாய் அழகு சிந்திய அந்தச் சிறுநகர் அவருக்கு அமைதியை அள்ளி வழங்கியது. ரஷ்யப் பெரும் சிந்தனையாளன் லியோ டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கை இலட்சியத்தின் ஆதர்சமாகத் திகழ்ந்தார். விரும்பித் தேர்ந்துகொண்ட வறுமை, உடல் உழைப்பு, யோகியின் சுய ஒழுக்கம் என்பன டால்ஸ்டாயிடமிருந்து அவர் பெற்றவை. 

ஏல்பிறகூம் நகரில் இருந்த ஒன்பது ஆண்டுகளில் அவர் பத்தொன்பது நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். இக்காலத்தில் ஆண்டிற்கு இரண்டு நூல்கள் என்று எழுதியிருக்கிறார். 

 1912ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி பகல் ஒரு மணி அளவில் தனது நாற்காலியில் இருந்தவாறு, தனது இனிய மனைவியை நோக்கி, 'என் வாழ்வு முடிந்து விட்டது' என்று முகத்தில் நேசம் பொங்கி வழிய, கருணை சிந்தும் விழிகளுடன் தன்னையும் மகள் நோராவையும் அணைத்த வண்ணம் கண்களை மூடிய அந்தக் கணங்களை எனது பேனையால் எவ்வாறு விபரிப்பேன்? என்று கண்களில் கண்ணீர்மல்க ஜேம்ஸ் ஆலனின் நினைவுக் குறிப்பை எழுதியிருக்கிறார் லில்லி. 

சுயமுன்னேற்ற நூலாக ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் உலகெங்கும் பரவின. பல்வேறு எழுத்தாளர்களின், சிந்தனையாளர்களின்மீது அவை ஆதிக்கம் செலுத்தின. பைபிளையும் பௌத்தத்தையும் இணைத்து அவர் சிந்தித்தார். எல்லோரும் இன்புற்றிருக்கும் வழியினைத் தேடினார்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்றார். ஒரு பொல்லாப்பும் இல்லை என்றார். இனியன நினைத்தல் வேண்டும் என்றார். அல்லல் அறுக்கும் வழி சமைத்தார்.  

அந்த ஞானியின் நூல்கள் தமிழில் நூறு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பில் வந்திருக்கின்றன என்பது வியப்பூட்டும் செய்தியாகும். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் சிறையிலிருந்தவாறு, ஜேம்ஸ் ஆலனின் As a Man Thinketh என்ற நூலை, 'மனம்போல் வாழ்வு' என்று தலைப்பில், 25.7.1930ஆம்  திகதியிட்டு, கோவிற்பட்டியிலிருந்து வெளியிட்டிருக்கிறார்.  வ.உ.சி. அவர்கள் மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் 'மனம் போல் வாழ்வு', 'அகமே புறம்', 'சாந்திக்கு மார்க்கம்' ஆகிய நூல்களைப்பற்றி மு.வரதராசன் அவர்கள் கூறும்போது, 'உயர்ந்த மெய்யுணர்வுக் கருத்துகளைச் செறிவான தமிழ் நடையில் புலப்படுத்தும் நூல்கள்' என்று குறிக்கிறார். 

1956இல் ஜேம்ஸ் ஆலனின் From Poverty to Power என்ற நூலினை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை  'திருநிறை ஆற்றல்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார்.  வ.உ.சி., கா.அப்பாத்துரை ஆகியோருக்குப் பின் ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளை மொழிபெயர்த்தும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு நூல்களை எழுதியும், அவருக்கு தற்காலத்தில் பெரும்புகழ் தேடிக்எகொடுத்தவர் ​ெடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஆவார்ரத்தைத் தொட்டு, அதை அன்றாட உலகில் வாழ, வழிமுறைகளைச் சொல்லிக்கொடுப்பவர் ஜேம்ஸ் ஆலன். 

நம் காலத்தில் ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் அனைத்தையும் மொழிபெயர்த்து வெளியிடுவதை ஒரு வேள்வி போன்ற அர்ப்பணத்தோடு செய்து வருபவர் சே. அருணாசலம் ஆவார். 'மனிதர்களும் அமைப்புகளும்', 'மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடித்தளம்', 'மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்', 'வாழ்வின் கொந்தளிப்புகளை கடந்த உயர்நிலைகள்', 'உள்ளத்திலிருந்தே வாழ்வு', சுவர்கத்தின் நுழைவாயில், சுவர்க வாழ்வின் தன்மைகள்', 'அருள் பொழியும் நிழல் பாதைகள்' ஆகிய நூல்களை சே. அருணாசலம் ஒரு தவம்போலவே தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். 

அவரது மொழிபெயர்ப்பில் ஜேம்ஸ் ஆலனின் Byways of Blessedness என்ற நூலின் சில பகுதிகள் இங்கு 'அருள்பொழியும் நிழல் பாதைகள்' என்ற தலைப்பின் கீழ் வெளியாகின்றன. ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பு சே.அருணாசலம் அவர்களுக்கு இதமாக வாய்த்திருக்கிறது.

அருள்பொழியும் நிழல் பாதைகள் என்ற தொடர் தமிழின் வடிவத்தில் அழகாக விழுந்திருக்கிறது. நெருடல் இல்லாத, சரளமான நடை இலகுவான வாசிப்பிற்கு இடம் தருகிறது. 

இந்த வெளியீட்டிற்கென்றே தனது மொழிபெயர்ப்பை மீண்டும் செப்பனிட்டுத் தந்திருக்கிறார் சே.அருணாசலம் அவர்கள். காலத்தின் தேவை அறிந்து, தனது மொழியாக்கத்தைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர் இசைந்திருப்பது அவரின் விசாலமான மனதை வெளிப்படுத்துகிறது. அவருடைய அனைத்து மொழியாக்கங்களையும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்க Creative Commons Attribution அமைப்பினர் ஒழுங்குகள் செய்துள்ளனர். 

மு.நித்தியானந்தன்
லண்டன்


Add new comment

Or log in with...