கொரோனா உலகப் பெருந்தொற்றின் விபரங்கள் கூறும் 'நுண்ணுயிர் எதிரி'

இலங்கை எழுத்தாளர் கே. நித்தியானந்தன் சென்னையில் வெளியிட்டுள்ள சமூக - உளவியல் கண்ணோட்ட நூல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறா வூரை சேர்ந்தவர் போதகர் குழந்தைவேலு நித்தியானந்தன். இவர் கடந்த ஒன்றரை தசாப்த காலத்துக்கு மேலாக தமிழ்நாட்டின் சென்னையில் வசித்து வருகின்றார்.

சென்னை Chris counselling care Trust உளநல ஆலோசகராகவும், கிறிஸ்தவ சம யப் போதகராகவும் அங்கு நீண்ட காலமாகப் பணியாற்றி வருகின்றார் நித்தியானந்தன்.

தமிழ்நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அவரது மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமயப் பணிகள் என்பதற்கு அப்பால், உளநல ஆலோசனை சேவைகளிலேயே போதகர் நித்தியானந்தன் மிகவும் பரபரப்பாக அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றார்.

'சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளல்' என்பது நித்தியானந்தன் அவர்களது உளநல ஆலோசனையின் மகுடவாசகம் ஆகும்.

பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவுன்சிலிங் பணிகளில் மாத்திரமன்றி, குடும்ப உளவள ஆலோசனை மற்றும் முரண்பாடுகளால் பிளவுண்டு போன குடும்பங்கள், மதுப்பாவனையினாலும் போதைப்பொருட்களுக்கு அடிமையானதாலும் சீரழிந்து போனவர்கள், மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கெல்லாம் உளவள ஆலோசனைகள் வழங்கி வருகின்றார் அவர்.

கொவிட் முடக்க காலப் பகுதியில் 'ஒன்லைன்' வழியாக ஆலோசனைகளை அவர் வழங்கினார். நிகழ்நிலை வழியாக அவரது ஆலோசனைகள் இன்றும் தொடர்கின்றன. போதகர் நித்தியானந்தன் தனது இத்தனை பரபரப்பான பணிகளுக்கும் மத்தியில், சமீபத்தில் 'நுண்ணுயிர் எதிரி' என்ற நூல் ஒன்றை சென்னையில் வெளியிட்டுள்ளார். சமூக - உளவியல் கண்ணோட்டமாக அமைந்திருக்கின்றது அந்நூல்.

'இனிய நந்தவனம் பதிப்பகம்' அந்நூலை அச்சிட்டுள்ளது. அதன் பதிப்பாசிரியரான நந்தவனம் சந்திரசேகரன் தனது பதிப்புரையில் சுருக்கமாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"கொரோனாவின் தாக்கத்தினால் மக்கள் பொருளாதார மற்றும் உளநலம் பாதிக்கப்பட்டு அல்லல்படுகின்ற இக்காலகட்டத்தில், மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் இந்நூலைப் படைத்திருக்கின்றார் கே. நித்தியானந்தன். நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய ஆதாரங்களைத் திரட்டி, வாசிப்போருக்கு புரியும்படியாக எளிமையான நடையில் அவர் இந்நூலைப் படைத்திருப்பது சிறப்பானது. பெருந்தொற்றின் துயரத்திலிருந்து மக்கள் மீண்டெழுவதற்கு சமூக உளவியல் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இந்நூல் பெரிதும் உதவும்."

இவ்வாறு பதிவிட்டுள்ளார் நந்தவனம் சந்திரசேகரன்.

'நுண்ணுயிர் எதிரி' நூலில் மொத்தம் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன.

ஐந்து அத்தியாயங்களிலும், எல்லாமாக இருபத்தைந்து உபதலைப்புகளின் கீழ் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. நுண்ணுயிரிகள், கொரோனா, அரசியல் யூகங்கள், கட்டுப்பாடும் விளைவுகளும், உளப் பாதிப்புகளும் மீட்சியும் ஆகியன நூலின் அத்தியாயங்களின் பிரதான தலைப்புகளாகும்.

நுண்ணுயிரிகள் தொடர்பான விரிவான விளக்கங்களுடன் நூல் நகரத் தொடங்குகின்றது. அதன் பின்னர் கொரோனாவின் தோற்றம், அவை உலகளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், தொற்றின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும், சர்வதேச ரீதியில் நாடுகளுக்கிடையேயான போட்டாபோட்டியில் கொரோனாவின் இன்றைய வகிபாகம், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருத்துவ அறிவியலாளர்களின் அர்ப்பணிப்புகள் என்றெல்லாம் இந்நூலை இலகுநடையில் படிப்படியாகவே நகர்த்திச் செல்கின்றார் நித்தியானந்தன்.

கொரோனாவின் தாக்கத்தினால் உளநலப் பாதிப்புகளுக்கு உள்ளானோர் எவ்வாறு மீண்டெழ முடியுமென்பது இன்றைய காலத்தில் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது. இந்நிலையில், இந்நூலில் நூலாசிரியர் அளித்திருக்கும் உளநல ஆலோசனைகள் மக்களுக்கு பெரிதும் துணைபுரியுமென்பதில் ஐயமில்லை.

அது மாத்திரமன்றி, கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் கலவரத்துக்கு உள்ளாக்கும் வகையில், சமூகவலைத்தளங்கள் ஊடாக விஷமத்தனமான கருத்துகளைப் பதிவிடுவோர் விடயத்தில் மக்கள் அவதானமாக இருந்து கொள்வதற்கான அறிவுரைகளையும் நூலாசிரியர் முன்வைக்கத் தவறவில்லை.

உலகளாவிய ரீதியில் நாடுகள் ஒவ்வொன்றிலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கங்களின் விபரங்களும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நூலாசிரியர் நித்தியானந்தன் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் உயிரியல் பிரிவில் உயர்தரம் பயின்ற பின்னர், கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தில் சில காலம் பணியாற்றி விட்டு, மதப் பணிகளில் காலடி பதித்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் மறைக் கல்வி பயின்ற பின்னர், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவப் பணியாளராக சேவையைத் தொடர்ந்தார். இலங்கையிலிருந்து சென்று சென்னையில் வசித்தவாறு தற்போது தனது பணிகளை தொடர்ந்து வருகின்ற நித்தியானந்தனின் துணைவியார் கலாநிதி ஆ.த. ஆடில் ஷிம்மிபெல், சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றுகின்றார்.

நித்தியானந்தனின் இளமைக்கால கல்லூரி நாட்கள் இனிமையானவை. அவரது தந்தையார் குழந்தைவேலு அவர்கள், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தின் புகழ்பெற்ற ஆசிரியர்களுள் ஒருவர். சிறந்த பண்பாளராகப் போற்றப்படுபவர். போதகர் நித்தியானந்தனைப் போன்று அவரது தந்தையார் அமரர் குழந்தைவேலு அவர்களும் எழுத்துத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராவார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்திருந்த அன்றைய காலகட்டத்தில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள்நலப் பணிகளில் ஈடுபட்டவர் நித்தியானந்தன். அவரது அன்றைய பணிகளுக்காக மக்களால் இப்போதும் பாராட்டப்படுகின்றார். பாடசாலைப் பருவத்திலிருந்து அவருடன் நெருங்கிய நட்பைப் பேணி வருகின்ற எஸ். பாண்டியன் எழுதிய அணிந்துரை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விவசாய உயிரியல் துறையின் தலைவராக பணியாற்றிய மருத்துவர் நித்தி கனகரத்தினம் அவர்களின் ஆசியுரை, கலாநிதி ஆ.த. ஆடில் ஷிம்மிபெல் மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியை பியற்றிஸ் கிறிஷ்ஷாந்தி விமலராஜன் ஆகியோர் வழங்கிய ஆசியுரைகளுடன் வெளிவந்துள்ளது 'நுண்ணுயிர் எதிரி' நூல்.

படிப்பதற்கு மாத்திரமன்றி, பத்திரப்படுத்தி வைப்பதற்குமான பயனுள்ள நூலாக உள்ளது 'நுண்ணுயிர் எதிரி'.


Add new comment

Or log in with...