பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள்மயப்படுத்தப்பட்டது

பிரதமரின் தலைமையில் பௌத்த தகவல் அமைப்பு மக்கள்மயப்படுத்தப்பட்டது-dba.gov.lk

நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் தகவல்களை உள்ளடக்கிய தகவல் அமைப்பை மக்கள்மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (29) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட இந்த தகவல்களை dba.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அரச நிறுவனங்களை டிஜிட்டல்மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரின் ஆலோசனைக்கமைய இந்த டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தை மூன்று மொழிகளிலும் mbs.gov.lk  என்ற இணையத்தள முகவரி ஊடாக அறிமுகப்படுத்தும் பணியும் பிரதமரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் பௌத்த தகவல் அமைப்பு மக்கள்மயப்படுத்தப்பட்ட நிலையில், திணைக்களத்தின் பணிகளை எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி முதல் தரவுதளத்தின் ஊடாக முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் கீழ் விகாரைகளை பதிவுசெய்தல், விகாராதிபதி பதவிகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் விகாரைகளின் அபிவிருத்திக்காக நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு வாய்ப்பளித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

இந்த தரவு அமைப்பில் இதுவரை 13972 விகாரைகள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அந்தந்த மாவட்ட மட்டத்தில் அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 13,972 விகாரைகளுக்குரிய வணக்கத்திற்குரிய தேரர்களின் எண்ணிக்கை 44,846 ஆகும்.

மேலும், 10,417 அறநெறி பாடசாலைகள் மற்றும் ஒவ்வொரு அறநெறி பாடசாலையிலும் பணியாற்றும் 127381 ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களும் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் மத்திய கலாசார நிதியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய தகவல் அமைப்பும் இதன்போது பிரதமரினால் இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதற்கமைய நீரில் மூழ்கிய 107 தொல்பொருள் தலங்கைள இனங்கண்டு மேற்கொண்ட ஆய்வுத் தகவல்கள், மத்திய கலாசார நிதியத்தின் ccf.gov.lk  என்ற இணையதளத்தில் விரைவில் புதுப்பிக்கப்படும்.

நீரில் மூழ்கிய தொல்பொருள் தளங்களின் கீழ் 101 கப்பல்கள் மற்றும் ஆறு விமானங்கள் பற்றிய தகவல்கள் இவ்வாறு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், மேலும் அந்த நிகழ்வுகளின் வரலாறு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத் துறைக்கு பங்களிப்பு செய்து இந்த இடங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

தற்போது அது தொடர்பான தகவல்களை https://nsd.ccf.gov.lk/ என்ற வலைத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருளியல் பேராசிரியர் காமினி ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...