கௌதாரிமுனை குழு மோதலில் கொலை; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி பூநகரி கௌதாரி முனையில் இளைஞர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை அன்றையதினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும்  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. 

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) சுற்றுலா சென்றிருந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நால்வர் நேற்று (27) பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரு பெண் உட்பட நான்கு சந்தேகநபர்களும் இன்று (28) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த 4 பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(பரந்தன் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...