கால் நூற்றாண்டு நிறைவு காணும் இனிய நந்தவனம்

அரசியல், சினிமா வாடையின்றி உலக தமிழ் பேசும் வாசகர்கள் மத்தியில் அபிமானம் பெற்றுள்ள பத்திரிகை

வெள்ளிவிழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளியில் இலக்கியத் திருவிழா; தமிழ் இதழியல் ஆர்வலர்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 25 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கிறது 'இனிய நந்தவனம்'. மக்கள் மேம்பாட்டு மாத இதழ் எழுத்தாளரும் கவிஞருமான நந்தவனம் சந்திரசேகரன் இனிய நந்தவனத்தின் வெளியிட்டாளரும் ஆசியருமாக இருந்து இவ்விதழை வெளியிட்டு வருகிறார்

பத்திரிகைப் பயணத்தில் கால் நூற்றாண்டைக் கடப்பதென்பது அவ்வளவு எளிதானதன்று. அதுவும் எந்த விதமான பணமலமோ, பின்புலமோ இல்லாமல் ஒற்றை மனிதராய் இருந்து எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வெற்றிகரமான பத்திரிகையாளராக வளம் வரும் நந்தவனம் சந்திரசேகரனை பாராட்ட வேண்டும். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தனித்துவமான அடையாளத்துடன் 'இனிய நந்தவனம்' வெள்ளி விழா ஆண்டில் தடம் பதித்திருப்பது பிரமிக்க வைக்கிறது. 1997ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்கு பக்கத்தில் தொடங்கப்பட்ட இனிய நந்தவனம் இன்று 64 பக்கங்களில் திங்கள் தோறும் வெளிவருகிறது.

இனிய நந்தவனத்தின் தனிச்சிப்பு என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் சிறப்பிதழ்களாக வெளிவருவதேயாகும். அரசியலும், சினிமாவும் இல்லை என்றால் தமிழ்ப் பத்திரிகைகளை வாசகர்கள் மத்தியில் கொண்டு சென்று சந்தைப்படுத்துவது சிரமம் என்ற சூழலில், மேற்கண்ட இரண்டும் இல்லாமலே இனிய நந்தவனம் வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது வியப்பானதுதான்

மக்களிடம் நல்ல விடயங்களை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமரசம் செய்து கொள்ளாமல் தொய்வில்லாமல் வெளியிட்டு வரும் இனிய நந்தவனத்தின் ஆசிரியர் குழுவினரையும் பாராட்ட வேண்டும்.

ஒரு தமிழ் பத்திரிகையை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு செல்வதே போராட்டமாக இருக்கும் போது, இனிய நந்தவனம் சர்வதேச தமிழர்களிடமும் கொண்டு செல்லப்பட்டு நன்மதிப்பைப் பெற்றிருப்பதும் பாராட்டத்தக்கதே.

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளதோடு பல வெளிநாட்டுச் சிறப்பிதழ்களையும் இனிய நந்தவனம் வெளியிட்டுள்ள என்பது இன்னொரு சிறப்பு. இதுவரையில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், கனடா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் பற்றிய சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக கனடா சிறப்பிதழ் நான்கு முறையும், மலேசியா சிறப்பிதழ் முன்று முறையும் சிங்கப்பூர் சுவிட்சர்லாந்து சிறப்பிதழ்கள் இரண்டு முறையும் வெளியிட்டு சர்வதேசத் தமிழர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.

தமிழ் இதழியல் வரலாற்றில் அதிக வெளிநாட்டு சிறப்பிதழ்கள் வெளியிட்ட பெருமையும் முதல்முறையாக தென்னாபிரிக்கா சிறப்பிதழ் வெளியிட்ட பெருமையும் இனிய நந்தவனத்துக்கு உண்டு.

இலக்கியப் பணிகள் மட்டுமல்லாமல் இனிய நந்தவனத்தின் இன்னொரு அங்கமான இனிய நந்தவனம் பதிப்பகம் மூலம் 150 தலைப்புகளில் பல சிறந்த நூல்களையும் வெளியிட்டு சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நந்தவனம் பவுண்டேசன் என்ற தொண்டுநிறுவனத்தின் மூலம் சர்வதேச அளவில் பல துறைகளில் சாதித்து வரும் பெண்களை கண்டடைந்து சர்வதேச மகளிர் தினத்தில் 'சாதனைப் பெண்' என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்படுவதோடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப்பெண் ஒருவருக்கு மாதந் தோறும் தையல் இயந்திரமும் வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.

இலக்கியப் பணி, சமூகப்பணி என மக்கள் மேம்பாட்டில் தனிக் கவனம் எடுத்து வரும் இனிய நந்தவனம் 2022 ஜனவரியில் 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது. 09. -01. -2022 அன்று திருச்சிராப்பள்ளியில் இலக்கியத் திருவிழாவாக கொண்டாடப்படும் இனிய நந்தவனம் வெள்ளி விழாவில் இலங்கையிலிருந்து தொழிலதிபரும் இலக்கியப் புரவலருமான ஹாசிம் உமர், தஞ்சை பாரத் கல்வி குழுமத் தலைவர் புனிதா கணேசன், திருச்சி ஆசியா ஸ்டீல்ஸ் உரிமையாளர் லயன் அச்சர் சிங், திருச்சி பாட்சா பிரியாணி சென்டர் உரிமையாளர் அபூபக்கர் சித்திக், விஜிபி நிறுவனத்தின் திருச்சிக் கிளைத்தலைவர் இரா.தங்கையா, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் முனைவர் கலையமுதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பல்துறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு 'வெற்றித் தமிழன்' விருதும், சிறந்த சுயமுன்னேற்ற நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு 'நம்பிக்கை நாயகன்' விருதும், வளர்ந்து வரும் இளம் பத்திரிகையாளர்களுக்கு 'இதழியல் மாமணி' விருதும் வழங்கப்படுவதாக நந்தவனம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...