திருக்கோவில் சூடு; சார்ஜென்டிற்கு ஜனவரி 06 வரை விளக்கமறியல்

திருக்கோவில் சூடு; சார்ஜென்டிற்கு ஜனவரி 06 வரை விளக்கமறியல்-Thirukkovil Police Shooting-Suspect Remanded Till January 06

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு 4 உத்தியோகத்தர்களைக் கொன்ற பொலிஸ் சார்ஜென்டை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் குறித்த  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த சார்ஜென்ட் ஒருவரே இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்ததோடு. பின்னர் சந்தேகநபர் மொணராகலை, எதிமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சிவில் உடை தரித்து உள்ளக கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் விடுமுறை கோரிய நிலையில் வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பைச் சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலைச் சேர்ந்த அப்துல் காதர், பிபிலை மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த துசார, பிரபுத்த ஆகிய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டில் இருவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவும் இன்று காலை ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒலுவில் பகுதியை சேர்ந்த  காதர் எனும் பொலிஸ் உத்தியோகத்தர் இன்று அதிகாலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காமையினால்  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சடலங்கள்  திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று காலை நேரில் சென்று பார்வையிட்ட அக்கரைப்பற்று நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்றின் நீதிபதி எம்.எச். மொஹமட் ஹம்சா, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரு சடலங்களையும் பார்வையிட்டார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் தலைமையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, இது தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.