இராகலை தீ விபத்து சம்பவம்; வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

இராகலை கோர தீ விபத்து சம்பவ வழக்கு விசாரணை இம்மாதம் (27) ஆம் திகதி திங்கட் கிழமைக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றிருந்த தீ விபத்து சம்பவத்தில் ஐவர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் இராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது 72நாட்களாக பதுளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான ஆறாவது வழக்கு விசாரணை (20.12.2021) இடம்பெறுமெனவும் இத்தினத்தில் சந்தேக நபரை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்ற நீதிபதி டி.ஆர்.எஸ்.ஜினதாச கடந்த 06.13.2021உத்தரவிட்டிருந்தார்.

அதேநேரத்தில் வருட கடைசி மாதத்திற்கான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான விடுமுறை எதிர்வரும் (27.12.201) வரை வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் (27.12.2021) திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வலப்பனை நீதிமன்ற பதிவாளர் (20) காலை தெரிவித்தார்.

இதன்போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தங்கையா இரவீந்திரன் மன்றில் ஆஜர் செய்யப்படுவார் எனவும் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

எனினும் நீதி மன்றத்தில் ஆறாவது முறையாகவும் ஆஜர்படுத்தப்படவில்லை.  அதேநேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேக நபரை பதுளையிலிருந்து அழைத்து வர முடியாது என கடந்த ஐந்து வழக்கு விசாரணைகளின் போதும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். நீதவான் சந்தேகநபருடன் ஸ்கைப் மூலமாகவே வழக்கு விசாரணையை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்