காஷ்மீர் கம்பளங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப துரித நடவடிக்கை

காஷ்மீர் கம்பளங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப துரித நடவடிக்கை-Kashmir Bed Spread-Mahmood Ahmed Shah

கைவினைக் கலைஞர்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்து, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் காஷ்மீர் கம்பளங்களுக்கு ஜி.ஐ குறியிடல் (GI Tags) விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத் திணைக்களப் பணிப்பாளர் மஹ்மூத் அகமது ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் செய்தி சேவைக்கு (கே.என்.எஸ்) வழங்கிய பிரத்தியேகக் கலந்துரையாடலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள ஷா 'காஷ்மீர் தரைவிரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்' என்றும் 'கடந்த இரு வருடங்களாக கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி குறைவடைந்துள்ளது. அதனால் இதன் ஏற்றுமதி விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதிக்கு 10 வீத ஊக்குவிப்புத்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். குறிப்பாக பஷ்மினா சால்வைகள் மற்றும் காஷ்மீர் தரைவிரிப்புகளின் ஏற்றுமதி விற்பனைக்கு இந்த ஊக்குவிப்புத்தொகை வழங்கப்படும். இதன் ஊடாக கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி விற்பனையை மீண்டும் அதிகரிக்கலாமென எதிர்பார்த்துள்ளோம்' என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இயந்திரம் கொண்டு உற்பத்தி செய்த கம்பளத்தைக் கையால் பின்னப்பட்ட கம்பளம் எனக்கூறி அதிக விலைக்கு விற்பனை செய்த கைவினைப் பொருட்கள் விற்பனையாளர் ஒருவரை எமது திணைக்களம் தடைப்பட்டியலில் அண்மையில் சேர்த்துள்ளது. கையால் தயாரிக்கப்படும் கம்பளங்கள் தொடர்பில் தவறாக முத்திரை குத்த வேண்டாமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். தவறிழைப்பவர்களுக்கு எதிராக நாம் கடும் நடவடிக்கை எடுப்போம்.

புதிய நில ஒதுக்கீட்டு கொள்கை எமது திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தின் ஊடாகத் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பில் 2500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உள்ளுரில் இருந்தே கிடைத்துள்ளன. அதனால் முதலீடு மற்றும் தொழில்வாய்ப்பு அளவு கோல்களின் அடிப்படையில் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. இங்கு முதலீடு செய்வதன் பிரதிபலன்களையும் தொழில் புரியக்கூடிய சூழல் தொடர்பான நல்ல புரிந்துணர்வும் காஷ்மீர் உள்ளூர்வாசிகளிடம் உள்ளது. 

'மக்கள் உற்பத்தித் துறையில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமைத் தொழில்களை ஊக்குவிக்க நாம் முயற்சிக்கின்றோம். எமது திணைக்களத்திற்கு யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனால் கை வேலைப்பாடுகள் கொண்ட கதவுகளை வடிவமைக்கவும் முயற்சிக்கின்றோம். நாம் இவ்வடிவமைப்புகளை உருவாக்கக்கூடிய பகுதிகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதோடு மக்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் இடையில் நேரடி தொடர்பை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்' என்றுள்ளார்.