கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து; மூவருக்கு பிணை

வைப்பக படம்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி  படகுப்பாதை விபத்துக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய  கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் தலா ரூ.5 இலட்சம் கொண்ட  இரு சரீரப்பிணைகளில்  செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் படகுப்பாதை கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த படகுப்பாதை உரிமையாளர் மற்றும் அதனை செலுத்தி வந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி  திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி சம்பவத்தில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)