கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கடற்பரப்பில் வைத்து சுமார் 250 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி படகு நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வெளிநாட்டு மீன்பிடி படகு போன்று மிகவும் சூட்சுமமாக மறைக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் கடத்தப்பட்ட இந்த படகில் இருந்து 6 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையின் சயுர கப்பலின் உதவியுடன் அழைத்து வரப்பட்டபோதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகு மற்றும் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களையும்   பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான அதிகாரிகள் நேற்று (15) பார்வையிட்டனர்.

இதன்போது கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்தன் வரவேற்றார்.

மேலும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளை பார்வையிட்ட பாதுகாப்பு செயலாளரிடம், மேற்படி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடித்த அதிகாரிகள் தமது செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளித்தனர்.

தாய் நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் போலீசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 2509 மில்லியன் ரூபா பெறுமதி என  மதிப்பிடப்பட்டுள்ளது.அத்தோடு குறிப்பிட்ட  போதைப் பொருட்களை சுமார் 900 கடல்மைல் தொலைவில் வைத்து இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதை ஒழிப்பு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ஸாதிக் ஷிஹான்)