பண்டிகைக்கு முன்னர் பூஸ்டர் டோஸ் வழங்க ஜனாதிபதி பணிப்புரை

பண்டிகைக்கு முன்னர் பூஸ்டர் டோஸ் வழங்க ஜனாதிபதி பணிப்புரை-3rd Dose Pfizer Vaccine Complete within 2 Weeks

- தடுப்பூசி பெறாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை
- 16-19 வயது சிறுவர்களுக்கு 2ஆவது டோஸ்
- 12-15 வயது சிறுவர்களுக்கு 1ஆவது டோஸ்
- பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்
- சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு மேலும் நீக்கம்

எதிர்வரும் பண்டிகையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு வாரங்களுக்குள் கொவிட்-19 தடுப்பூசியின் 3ஆவது (Booster) டோஸை வழங்கி நிறைவு செய்யுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொவிட் ஒழிப்பு விசேட செயலணி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் விசேட குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்று 03 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் பூஸ்டர் டோஸினை பெறத் தகுதியுடையவர்களாகின்றனர். அதற்கமைய, தடுப்பூசி வழங்கப்படும் எந்தவொரு இடத்திலும் நாளை (11) முதல் தினமும் பூஸ்டர் டோஸாக Pfizer தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பதிவாகிவரும் கொவிட் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொவிட் தொற்று மற்றும் அதன் காரணமான இறப்பு எண்ணிக்கையை குறைக்க, தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். இது தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்
இதேவேளை, கொவிட் பவலைத் தடுக்க, தடுப்பூசி போடப்படாதவர்களை பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க தற்போது சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்க கொவிட் குழு இன்று தீர்மானித்துள்ளது.

பிள்ளைகளுக்கு 1ஆவது மற்றும் 2ஆவது டோஸ் தடுப்பூசி
16 முதல் 19 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கும் இரண்டாவது டோஸும், 12 முதல் 15 வயது வரை சிறுவர்களுக்கு முதல் டோஸும் அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, தடுப்பூசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு மேலும் நீக்கம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதோடு, விமான நிறுவனங்கள் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. அதற்கமைய, தற்போதுள்ள ஊக்குவிப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.