பல்கலைக்கழகத்திற்கான மாணவர் பதிவு டிசம்பர் 16 வரை நீடிப்பு

பல்கலைக்கழகத்திற்கான மாணவர் பதிவு டிசம்பர் 16 வரை நீடிப்பு-UGC Registration Extended Until December 16

பல்கலைக்கழகங்களுக்கு தகுதியான மாணவர்களை பதிவு செய்வதற்கான காலம் டிசம்பர் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.

2020 க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் கடந்த நவம்பர் 26 முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இப்பதிவுகளை மேற்கொள்வதற்கான இறுதித் திகதி டிசம்பர் 05ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அத்திகதி இன்று (10) வரை நீடிக்கப்பட்டதோடு, தற்போது அத்திகதி டிசம்பர் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு அவர்கள் வழங்கியுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு SMS மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பெறப்படும் தகவலுக்கமைய, மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தமக்கான பாடநெறிகளின் கீழ் பதிவுகளை மேற்கொள்ள முடியுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.