தற்கொலைக்கு நவீன இயந்திரம்; சுவிஸ் அரசு அனுமதி

Sarco Capsule Suicide-Machine

சார்கோ கேப்சூல் (Sarco Capsule) எனப்படும் அமைதியான முறையில்  தற்கொலை செய்துகொள்ளும் இயந்திரத்தினைப் பயன்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை 3D Printed தொழினுட்பம் மூலம் அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச இலாப நோக்கற்ற எக்ஸிட் இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த இயந்திரத்தினை அதன் உள்ளே அமர்ந்திருப்பவர் செயற்படுத்த முடியும், மேலும் அதை எளிதாக எங்கும் இழுத்துச் செல்லவும் முடியும். சவப்பெட்டி போன்ற இந்த அமைப்பு "மிகவும் வசதியாக" வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எக்சிட் இன்டர்நேஷனல் (Exit International) நிறுவுனர் டாக்டர் பிலிப் நிட்ச்கே (Philip Nitschke) குறிப்பிடுகிறார்.

ஒருவர் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்றதும் அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும், அதன் பிறகு செயன்முறையைச் செயற்படுத்த பொத்தானை அழுத்துவதற்கு அவருக்கு நேரம் வழங்கப்படும். பொத்தானை அழுத்தியதும், கேப்சூல் நைதரசனால் நிரப்பப்படும், இது 30 செக்கன்களில் ஒட்சிசன் அளவை 21% இலிருந்து 1% ஆகக் குறைக்கும். இதனைத் தொடர்ந்து அந்த நபர் தன்னிலையை மறப்பார்.

அவர் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சிறிது மகிழ்ச்சியாக உணருவார். "சுயநினைவை இழந்த பிறகு, இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் ஆழ்ந்த தூகத்திற்கு செல்கிறார், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவிற்குச் சென்று விடுகிறார். அதன் பின்னர், 5-10 நிமிடங்களுக்குப் பிறகு மரணம் நிகழும் என்று அவர் விளக்குகிறார்.

இதன்போதான முழுச் செயன்முறையின் போதும், ​​உள்ளே இருக்கும் நபர் எந்த பீதியையோ அல்லது மூச்சுத் திணறல் உணர்வையோ உணராமல் அமைதியான முறையில் இறப்பார் என்று நிட்ச்கே குறிப்பிடுகிறார்.

இதேவேளை, இந்த நைதரசன் வாயு முறை மூலம் இதுவரை 1,300 பேர் வரை இறந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவ்வாறானதொரு இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

  • தேசிய மனநல உதவி இலக்கம் 1926
  • இலங்கை சுமித்ரயோ 011 2696666
  • CCC line 1333