குறிஞ்சாக்கேணி அனர்த்தம்; கைதான மூவருக்கும் டிசம்பர் 16 வரை விளக்கமறியல் நீடிப்பு

குறிஞ்சாக்கேணி அனர்த்தம்; கைதான மூவருக்கும் டிசம்பர் 16 வரை விளக்கமறியல் நீடிப்பு-Kurinchakerni-Disaster-Kinniya-Trincomalee-3 Suspects Remanded Till Dec 16

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை அனர்த்தம் தொடர்பில் குறித்த படகின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவர் ஆகிய கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (08)  இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

கிண்ணியா, பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த முகமது அலி முகமது ரியாஸ் (40), அப்துல் முத்தலிப் பஸ்மி (35), ஜமால்தீன் முபாரக் (35)  ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி படகுப்பாதை கவிழ்ந்த சம்பவத்தில் இதுவரை 5 மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இழுவைப்படகை செலுத்திய சந்தேகநபர்கள் நவம்பர் 24ஆம் திகதி கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் இழுவைப் படகை பாவிப்பதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கிண்ணியா நகர சபைத் தவிசாளருக்கு நாளை (09)  வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கு நாளை எழுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)