கெசல்வத்த பவாஸ் கொலை; சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளிப்படுத்திய தகவல்கள்!

கொழும்பு, வாழைத்தோட்டம் – பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீர்சாஹிபு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் காரில் வந்தோரால் கொடூரமாக் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘கெசல்வத்த பவாஸ்’ என அறியப்படும் மொஹம்மட் காமில் மொஹம்மட் பவாஸ் எனும் 33வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனி இரவு (04) கார் ஒன்றில் வந்தவர்கள் பவாஸைத் துரத்திச் சென்று, கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். ‘கெசல்வத்த பவாஸ்’ 7கிராம் 300மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் 11ஆம் திகதியே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸாரும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை நடத்தும் நிலையில், கெசல்வத்த தினுகவின் பாதாள உலக குழுவினர், இக்கொலையின் பின்னணியில் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கிறது.